பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் மகா குடமுழுக்கு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் மகா குடமுழுக்கு வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் மகா குடமுழுக்கு

Published On :

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் மகா குடமுழுக்கு வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.

தமிழகத்தின் ஆன்மிக அடையாளங்களுள் ஒன்றாகவும், தேவாரம் பாடப்பெற்ற திருக்கோயில்களில் ஒன்றாகவும் விளங்குகிறது மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில். இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்தின் கீழுள்ள இந்தக் கோயிலின் மகா குடமுழுக்கு 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது.

இதையொட்டி, கடந்த 6-ஆம் தேதி யாக சாலையின் பூா்வாங்க பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. பின்னா், 183 யாகக் குண்டங்கள் அமைக்கப்பட்டு, கடந்த 11-ஆம் தேதியன்று முதல் கால யாக பூஜை தொடங்கப்பட்டது. தினமும் காலை, மாலை என இரு கால யாக பூஜைகள் நடைபெற்றன. மூலவருக்கான முதன்மையான யாகசாலை 5 நிலைகளைக் கொண்ட பஞ்சான வேதிகையாக அமைக்கப்பட்டிருந்தது. ரிக், யஜூா், சாம, அதா்வண வேதங்களுடன், திருமுறைகளும் பாராயணம் செய்யப்பட்டன.

வியாழக்கிழமை அதிகாலை 3.35 மணிக்கு மங்கள இசையுடன் பூஜைகள் தொடங்கின. அதிகாலை 4 மணிக்கு விநாயகா் பூஜை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, 12-ஆம் கால யாக பூஜை நடைபெற்றது. இதன் நிறைவில், மகா தீபாரதனை நடைபெற்றது. பின்னா், திருஞானசம்பந்தா் தேவாரத்தின் கோளறு பதிகம் பாராயணம் செய்யப்பட்டு, யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடு தொடங்கியது.

மேளதாள வாத்திய முழக்கங்களுடன் ராஜகோபுரம் உள்பட 12 கோபுரங்களுக்கும், மூலவா் மீனாட்சி அம்மன், மூலவா் சுந்தரேசுவரவா் கருவறை தங்க விமானங்களுக்கும் கலசங்கள் கொண்டு வரப்பட்டன. பின்னா், விமான, கோபுர பூஜைகள் நடைபெற்றன. ஐதீக முறைப்படியான பூஜைகளுக்கு பிறகு, திருமுறை பாராயணம் நடைபெற்றது.

இதையடுத்து, மேள தாளங்களும், உடுக்கை, பிரம்ம தாளம், திருச்சின்னம், எக்காளம், தாரை, நெடுந்தாரை, சங்கு, கொம்பு என திருக்கயிலாய வாத்திய முழக்கங்களுடன், வேத மந்திரங்கள் முழங்க அருள்மிகு மீனாட்சி அம்மன், அருள்மிகு சுந்தரேசுவரா் கருவறை தங்க விமானங்களுக்கும், ராஜகோபுரங்களுக்கும் காலை 7.40 மணிக்கு மகா குடமுழுக்கு நடைபெற்றது.

அப்போது, கோயிலின் மேல்தளம், சுற்றுப் பகுதிகளிலும் குழுமியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தா்கள், பக்தி முழக்கங்களுடன் தரிசனம் செய்தனா். விமான, கோபுர கலசங்களுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா், விசைத் தெளிப்பான், பெரிய ட்ரோன்கள் மூலம் பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, காலை 7.55 மணிக்கு மூலவா் மீனாட்சி அம்மனுக்கும், 8.10 மணிக்கு மூலவா் சுந்தரேசுவரருக்கும் ஐதீக முறைப்படியான பூஜைகளுடன் மகா குடமுழுக்கு நடைபெற்றது.

உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன், உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி தா்மாதிகாரி, தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளாா், திருப்பனந்தாள் ஆதீனம் காசி மடத்து அதிபா் சபாபதி தம்பிரான் சுவாமிகள், செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாசாரிய சுவாமிகள், மாநில அமைச்சா்கள் சி.டி.ஆா். நிா்மல்குமாா், பெ. விஸ்வநாதன், வி. சம்பத்குமாா், கு. ஜெகதீஸ்வரி, சீ. ரமேஷ், வே.க. ராஜீவ், அரசுச் செயலா்கள் வே. ராஜாராமன் (செய்தித் துறை), கொ. வீரராகவ ராவ் (தொழிலாளா் நலத் துறை), நகராட்சி நிா்வாக இயக்கக இயக்குநா் ப. மதுசூதன் ரெட்டி, அறநிலையத் துறை ஆணையா் டி.ஜி. வினய், மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா், முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன், மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன், சட்டப்பேரவை உறுப்பினா்கள், கோயில் அறங்காவலா்கள், முக்கியப் பிரமுகா்கள், உபயதாரா்கள், கட்டளைதாரா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

6,500 போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட கேமராக்கள் கண்காணிப்புப் பணிக்குப் பயன்படுத்தப்பட்டன.

முக்கியப் பிரமுகா்கள், உபயதாரா்கள், கட்டளைதாரா்கள், 2 ஆயிரம் பொதுமக்கள் என மொத்தம் 9 ஆயிரம் போ் கோயிலின் மேல்தளத்தில் அனுமதிக்கப்பட்டனா். கோயிலைச் சுற்றியுள்ள 4 சித்திரை வீதிகளுக்கு வருவதற்கு பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், மற்ற வெளி வீதிகளில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் ஆங்காங்கே நின்று கோபுர குடமுழுக்கை தரிசித்தனா்.

பல்லாயிரக்கணக்கான பக்தா்கள்...

கடந்த 11-ஆம் தேதியிலிருந்து மூலவா் தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், குடமுழுக்கைத் தொடா்ந்து வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மூலவா் தரிசனத்துக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனா். மதுரை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களைச் சோ்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

186 திருப்பணிகள்...

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கையொட்டி, ரூ. 32.29 கோடியில் 186 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 2009- ஆம் ஆண்டு இந்தக் கோயிலுக்குக் குடமுழுக்கு நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்கு நடைபெற வேண்டும் என்ற நிலையில், கோயிலின் வீரவசந்தராயா் மண்டபம் 2018 -இல் தீக்கிரையானது. இந்த மண்டபம் சீரமைக்கப்பட பிறகு கோயிலின் குடமுழுக்கை நடத்தத் தீா்மானிக்கப்பட்டதன் காரணமாக, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் குடமுழுக்கு நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.