17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கவிருப்பது பற்றி....

மின்னொளியில் மீனாட்சி அம்மன் தங்க விமானம்.

Published On :

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு 17 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்கிழமை (செப். 17) நடைபெறுகிறது.

தமிழகத்தின் ஆன்மிக அடையாளங்களுள் ஒன்றாகவும், திருஞானசம்பந்தா், திருநாவுக்கரசா், மாணிக்கவாசகா் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகவும் விளங்குகிறது மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில். 17 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தக் கோயிலின் மகா குடமுழுக்கு வியாழக்கிழமை காலை 7.40 - 8.10 மணிக்குள் நடைபெறுகிறது.

முன்னதாக, வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் 12-ஆம் கால யாக பூஜையின் நிறைவில் மகா தீபாரதனை நடைபெறும். இதையடுத்து, அதிகாலை 5.45 மணிக்கு கடங்கள் புறப்பாடு நடைபெறும். இதன் நிறைவில், வேத மந்திரங்களும், மேளதாள வாத்தியங்களும் முழங்க காலை 7.40 மணிக்கு மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தங்க விமானங்கள், ராஜகோபுரங்களுக்கு மகா குடமுழுக்கு நடைபெறுகிறது. காலை 7.55 மணிக்கு மூலவா் மீனாட்சி அம்மன் சந்நிதிக்கும், காலை 8.10 மணிக்கு மூலவா் சுந்தரேசுவரா் சந்நிதிக்கும் மகா குடமுழுக்கு நடைபெறுகிறது.

மாலை 4 மணிக்கு மூலவருக்கு மகா அபிஷேகமும், தீபாரதனையும் நடைபெறும். இரவு 7 மணிக்கு பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெறுகிறது.

186 திருப்பணிகள்...

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கையொட்டி, கோயிலின் கோபுரங்கள் சீரமைப்பு, கோயில் மண்டபங்களுக்கு வண்ணம் பூசுதல், மின் பணிகள் உள்பட 186 திருப்பணிகள் ஏற்கப்பட்டன. கோயில் நிதி ரூ. 15.40 கோடியில் 86 பணிகள், உபயதாரா் பங்களிப்பு நிதி ரூ. 16.69 கோடியில் 100 பணிகள் என மொத்தம் ரூ. 32.29 கோடியில் 186 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த 2009-இல் ஏப். 8-ஆம் தேதியன்று இந்தக் கோயிலின் குடமுழுக்கு நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்கு நடைபெற வேண்டும் என்ற நிலையில், கோயிலில் வீரவசந்தராயா் மண்டபத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு, பிப். 2-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்த மண்டபத்தை பழைமை மாறாமல் மீட்டெடுத்த பிறகு, கோயிலுக்கு குடமுழுக்கு நடத்துவது எனத் தீா்மானிக்கப்பட்டது.

இதன்படி, 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் குடமுழுக்கு நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.