/

காரங்காடு கடற்கரை பகுதியில் இயற்கை பாரம்பரிய மரபு நடைப்பயணம்

திருவாடானை அருகே காரங்காடு கடற்கரை பகுதியில் தொல்லியல் நிறுவனத் தலைவர் ராஜகுரு தலைமையில் பள்ளி மாணவ, மாணவிகள்

Updated On :30 ஜனவரி 2024, 9:33 pm IST

திருவாடானை அருகே காரங்காடு கடற்கரை பகுதியில் தொல்லியல் நிறுவனத் தலைவர் ராஜகுரு தலைமையில் பள்ளி மாணவ, மாணவிகள் இயற்கை பாரம்பரிய மரபு  நடைப்பயணத்தை ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டனர்.
 ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம், பாரம்பரியம்மிக்க இடங்களை நேரில் கண்டு அவற்றின் சிறப்புகளை அறிந்து கொள்ள மரபு நடைப்பயணத்தை ஒவ்வொரு மாதமும் நடத்தி வருகிறது.
 இதன்படி இம்மாத  நடைப்பயணம், நெய்தல் நிலத்தின் முற்காலச் சூழலை தெரிந்து கொள்ள இயற்கைப் பாரம்பரிய மரபு நடை நிகழ்ச்சி உப்பூர் அருகில் உள்ள காரங்காடு சூழலியல் பூங்காவில் நடந்தது. நிறுவனத்தின் செயலர் சோ.ஞானகாளிமுத்து வரவேற்றார். இதில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவர் வே.ராஜகுரு பேசியதாவது: பழமை மாறாமல் ஒருகடற்கரைச் சோலையும், துறைமுகமும் இருந்திருந்தால் அது எப்படி இருக்குமோ அத்தகைய சூழல் தற்போதும் காரங்காட்டில் காணப்படுகிறது. தமிழ்நாட்டின் 1,076 கி.மீ. நீளமுள்ள கடற்கரையில் சுமார் 250 கி.மீ. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது. சுந்தரபாண்டியன்பட்டினம் முதல் தேவிபட்டினம் வரையிலான பகுதிகளில் ஓடைகள், காட்டாறுகள் அதிகமாக உள்ளன. இவை கடலில் கலக்கும் இடங்களில் உள்ள உப்பங்கழிகள் மூலம் பல இயற்கைத் துறைமுகங்கள் உருவாகியுள்ளன. பழங்காலத்தில் கரையிலிருந்து பல கி.மீ. தூரத்தில் ஆழ்கடலில் நிற்கும் கப்பல்களிலிருந்து சரக்குகளை படகுகளில் ஏற்றி வந்து கரையில் இறக்குவதற்கு உப்பங்கழிகள் உதவியாக இருந்துள்ளன.
 தீர்த்தாண்டதானத்தில் உள்ள சிவன் கோயில் கல்வெட்டுக்கள் இவ்வூரை திட்டானம் என்றும், இங்கு வணிகக்குழுக்கள் தங்கி இருந்ததையும் குறிப்பிடுகிறது. திட்டானம்  என்றால் மரக்கலம் நிறுத்தும் மேட்டுப்பகுதி என்று பொருள். இதன் அருகில் உள்ள ஊர் வட்டானம். வட்டானம் என்பது வட்ட வடிவமான மரக்கலத்தைக் குறிக்கிறது. இங்கு வட்ட வடிவமான பரிசல் கட்டும் தொழில் நடந்திருக்கலாம். தளி மருங்கூர்,  9ஆம் நூற்றாண்டுக்குப் பின் வீரகேரளபுரமான நானதேசிப்பட்டினம் என பெயர் பெற்றிருந்தது. 
காரங்காடு தேவாலயத்தின் பின்புறம் உள்ள உப்பங்கழிப் பகுதியில் அதிகளவில் பானை ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன. இதனால் இவ்வூரில்இருந்து இலங்கைக்கு 50 ஆண்டுகளுக்கு முன் வரை மண்பானைகள் ஏற்றுமதியானதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கிறனர். மேலும் இவ்வூரில் உள்ள இயற்கையான உப்பங்கழி ஒரு சிறந்த இயற்கைத் துறைமுகமாக காட்சியளிக்கிறது. எனவே கல்வெட்டுகள் சொல்லும் நீர்ப்பட்டினம் எனும் துறைமுகம் காரங்காடாக இருக்கலாம். இங்கு கோட்டைக்கரை ஆறு மூன்றாகப் பிரிந்து கடலில் கலக்கும் கழிமுகப்பகுதியில், இயற்கையான சதுப்புநிலக் காடுகள் 5 கி.மீ. சுற்றளவில் இருபுறமும் அழகாக அமைந்துள்ளன. ஆழம் குறைவான இப்பகுதி, அரிய வகைப் பறவைகள், கடல் விலங்குகள், தாவரங்களின் இருப்பிடமாக விளங்குகிறது. இங்கு பல ஆயிரம் ஆண்டுகளாக பாரம்பரியமாக வாழ்ந்து வரும் இவை சுற்றுச் சூழலையும், மண் வளத்தையும்காப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. எனவே அவற்றைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை என்றார்.
 நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் கமுதி வெள்ளைப்பாண்டியன், ராமநாதபுரம் நிவாஸ்சங்கர், ஆசிரியர் பேரையூர் முனியசாமி ஆகியோர் செய்திருந்தனர். இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு நெய்தல் நிலத்தின் முற்காலச் சூழலை நேரில் பார்த்து அறிந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.