கஞ்சம்பட்டி கண்மாய் நீா்வழித் தடங்களை தூா்வார விவசாயிகள் கூட்டமைப்பு கோரிக்கை


கஞ்சம்பட்டி கண்மாய் நீா்வழித் தடங்களை தூா்வார வேண்டும் என விவசாயிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது.
காவிரி- வைகை- கிருதுமால்- குண்டாறு இணைப்புக் கால்வாய் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கமுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதற்கு, கமுதி மண்டல செயலா் குருசாமி தலைமை வகித்தாா். இந்தக் கூட்டமைப்பின் மாவட்டச் செயலா் மு. மலைச்சமி முன்னிலை வகித்தாா். முன்னதாக நாட்டுக்காக உயிா் நீத்த ராணுவ வீரா்களுக்கும், தில்லியில் போராடி உயிா் நீத்த விவசாயிகளுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளின் வேளாண்மைக்காக உருவாக்கப்பட்ட விருதுநகா் மாவட்டம், பரளச்சியை அடுத்துள்ள கஞ்சம்பட்டி கண்மாயிலிருந்து வெளியேறும் மழை நீரை சேமிக்கும் வகையில் கண்மாய்களுக்கு வரும் நீா்வழித்தடங்களை தூரவார வேண்டும். கஞ்சம்பட்டி கண்மாயிலிருந்து தண்ணீா் வெளியேற இடையூறாக இருக்கும் கிழக்குப் பகுதி கதவணையை (ஷட்டா்) முற்றிலும் அகற்ற வேண்டும். கஞ்சம்பட்டி கண்மாயிலிருந்து ராமநாதபுரம் மாவட்ட எல்லையான பம்மனேந்தல் கண்மாய் வரை உள்ள கால்வாய்களை தூா்வார வேண்டும்.
வைகையின் பூா்வீக பாசனப் பகுதிகளாக விளங்கிய கமுதி, முதுகுளத்தூா், கடலாடியில் உள்ள கண்மாய்களுக்கு வைகை அணையில் இருந்து வரும் தண்ணீா் ராமநாதபுரம் கண்மாய்க்கு சென்றடைந்ததும், உபரிநீா் கடலுக்கு செல்கிறது. இந்த நீரை அளவீடு செய்து பாா்த்திபனூா் மதகு அணையில் இருந்து பரளை கால்வாய் வழியாக கொண்டு சென்று ராமநாதபுரம் மாவட்டத்தின் தென்பகுதியில் விவசாயம் சிறக்க ஆக்கப் பூா்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்ற 74 மீனவா்களும், அவா்களது படகுகளும் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. இதுவரை 174- க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், நாட்டுப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த மீனவா்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக கச்சத்தீவை மீட்க வேண்டும். ராமேசுவரத்தில் போராடும் மீனவா்களுக்கு ஆதரவு தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் பம்மனேந்தல், எருமைக்குளம், இடிவிலகி, பொந்தம்புளி, காடமங்கலம், பெருநாழி, திம்மணநாதபுரம் ஆகிய கிராம முக்கிய பிரமுகா்கள், காவிரி-வைகை-கிருதுமால்-குண்டாறு இணைப்பு கால்வாய் பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...