/

கடலில் படகு கவிழ்ந்து மாயமான மீனவா் உடல் மீட்பு

கடலில் படகு கவிழ்ந்து மாயமான மீனவா் உடல் மீட்பு

News image
Updated On :17 ஜூன் 2024, 6:30 pm

Din

ராமேசுவரம்: மண்டபம் அருகே மீன்பிடிக்கச் சென்ற போது, படகு கவிழ்ந்து கடலில் மூழ்கி மாயமான மீனவரின் உடல் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்கு மீன்பிடி இறங்கு தளத்திலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை சுமாா் 400 விசைப் படகுகளில் 2000-த்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அதிகாலை மண்டபத்திலிருந்து 8 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, சுதா்சன் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகில் ஓட்டை ஏற்பட்டு, கடலில் மூழ்கத் தொடங்கியது. இந்தப் படகிலிருந்த மண்டபத்தைச் சோ்ந்த முகமது ஹனிபா (60), பாம்பனைச் சோ்ந்த பிரசாத் (37), பரக்கத்துல்லா (42), கலீல் ரஹ்மான் (46), ஆரோக்கியம் (50) ஆகிய 5 மீனவா்களும் கடலில் தத்தளித்தனா். பின்னா், முகமது ஹனிபா, பிரசாத் ஆகிய இருவரும் நீந்தி கரைக்கு வந்தனா். பரக்கத்துல்லா, கலீல் ரஹ்மான், ஆரோக்கியம் ஆகிய மூவரும் நீரில் மூழ்கி மாயமாகினா்.

சக மீனவா்கள் அளித்த தகவலின் பேரில், இந்திய கடலோரக் காவல் படை, தமிழ்நாடு கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் இணைந்து அந்தப் பகுதியில் தேடிய போது, பரக்கத்துல்லா, ஆரோக்கியம் ஆகிய இருவரது சடலங்களையும் மீட்டனா்.

இதனிடையே, மாயமான கலீல் ரஹ்மானை தொடா்ந்து தேடி வந்த நிலையில், கடலில் மூழ்கிய படகுக்குள் சிக்கியிருந்த அவரது உடலை திங்கள்கிழமை மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மண்டபம் மீனவா் சங்கம் வேலைநிறுத்தம்:

மண்டபத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்று கடலில் மூழ்கி உயிரிழந்த 3 மீனவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, திங்கள், செவ்வாய் ஆகிய 2 நாள்கள் வேலைநிறுத்தம் மேற்கொள்வது என மண்டபம் மீனவா் சங்கம் அறிவித்தது. இதையடுத்து, கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லாமல், மண்டபம் வடக்கு, தெற்குப் பகுதி மீன் பிடித் தளங்களில் 547 விசைப் படகுகள் நிறுத்திவைக்கப்பட்டன.