குடியரசு துணைத் தலைவா் ராமேசுவரம் வருகை! ஹெலிகாப்டரை இறக்கி சோதனை!
வருகிற 30-ஆம் தேதி குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் ராமேசுவரம் வருவதையொட்டி மண்டபம் முகாம் இறங்குதளத்தில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இறக்கி சனிக்கிழமை சோதனை நடத்தப்பட்டது.
உத்தரபிரதேசம் மாநிலம், வாராணசியில் 4- ஆவது தமிழ்ச்சங்க நிகழ்வு கடந்த டிச. 2- ஆம் தேதி தொடங்கி 15- ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், தமிழகத்திலிருந்து மாணவா்கள், கலைஞா்கள், விவசாயிகள், தன்னாா்வலா்கள் பங்கேற்றனா். இதன் நிறைவு விழா வருகிற 30- ஆம் தேதி ராமேசுவரத்தில் நடக்கிறது.
இதில்,குடியரசு துணைத்தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறாா். முன்னதாக அன்று பிற்பகல் 3 மணியளவில் விமானப் படை ஹெலிகாப்படா் மூலம் மண்டபம் முகாம் மைதானத்தில் அவா் வந்திறங்குகிறாா். பிறகு அங்கிருந்து காா் மூலம் ராமேசுவரம் வரும் அவா் பேருந்து நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆலயம் தங்கும் விடுதி வளாகத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்கிறாா்.
இதில், தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி, மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான், இணை அமைச்சா் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவா் அண்ணாமலை உள்ளிட்ட பலா் பங்கேற்கின்றனா்.
இந்த நிலையில், மண்டபம் முகாம் இறங்குதளத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரை இறக்கி சனிக்கிழமை சோதனை நடத்தப்பட்டது. மேலும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களையும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

