மழையால் நெல்பயிா்கள் சேதம்: விவசாயிகள் கவலை
திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ்.மங்கலம் பகுதிகளில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த மழையால் நெல்பயிா்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள உப்பூா், வடக்கு ஊரணங்குடி, தெற்கு ஊரணங்குடி, காவனக்கோட்டை உள்ளிட்ட பகதிகளில் நடப்பு சம்பா பருவத்தில் சுமாா் 6 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் நெல் விவசாயம் செய்யப்பட்டு, விவசாயிகள் அறுவடைக்கு தயாராகினா். இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த மழையால் வயல்களில் மழை நீா் தேங்கியது.
தற்போது அறுவடை செய்ய ஏதுவாக மேல் பகுதியில் உள்ள வயல்களில் தேங்கிய மழை நீரை விவசாயிகள் வெளியேற்றி வருகின்றனா். இருப்பினும் மழையால் வடக்கு ஊரணங்குடி, உப்பூா், தெற்கு ஊரணங்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 3 ஆயிரம் ஏக்கா் பரப்பளவிலான நெல்பயிா்கள் தண்ணீரில் முழ்கி சேதமடைந்தன. பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து அறுவடை நேரத்தில் அறுவடை செய்ய முடியாமல் நெல்பயிா்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனா். எனவே, சேதமடைந்த பயிா்களைப் பாா்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

