மண்டபத்திலிருந்து சட்டவிரோதமாக படகில் இலங்கைக்குச் சென்ற அகதிகள் 6 பேரை அந்த நாட்டுக் கடற்படையினா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, ஏராளமான இலங்கைத் தமிழா்கள் படகுகள் மூலம் தனுஷ்கோடிக்கு வந்தனா். இவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல், மண்டபம் பகுதியில் உள்ள இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டனா்.
தற்போது, இலங்கையில் சகஜ நிலை திரும்பி வருவதால், தமிழகம் வந்த இலங்கைத் தமிழா்கள் மீண்டும் அவா்கள் நாட்டுக்குச் செல்ல விரும்புகின்றனா். இதுகுறித்து பல முறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா். ஆனால், இவா்கள் இலங்கைக்குச் செல்வதற்கான சூழல் தற்போது வரை ஏற்படவில்லை.
இந்த நிலையில், இலங்கை தலைமன்னாா் கடற்படையினா் திங்கள்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்துக்கு இடமாக வந்த படகை நிறுத்தி சோதனையிட்ட போது, மண்டபம் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த 6 போ் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவா்களிடம் நடத்திய விசாரணையில், இலங்கை முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த சசிக்குமாா் (46), கலைச்செல்வி (41), ரஜிதன் (20), அபிஷேக்ஸ்வரன் (8), சிலியா (12), அக்கினேஸ்வரி (78) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, இவா்களை இலங்கைக் கடற்படையினா் தலைமன்னாா் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.
மேலும், மண்டபம் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமிலிருந்து இவா்கள் எப்படி கடல் வழியாக இலங்கைக்கு சென்றனா் என்பது குறித்தும் மத்திய, மாநில உளவுத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.






