சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பேரூராட்சி பகுதியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால் மானாமதுரை பேரூராட்சி பகுதியில் டெங்கு மற்றும் இதர நோய்களைக் கட்டுப்படுத்தும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொசுப்புழுக்கள் மற்றும் கொசுக்களை ஒழிக்க குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளை சுத்தம் செய்து சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி டெங்கு ஒழிப்பு மண்டல அலுவலர்கள் புஷ்பாதேவி, ஜான்சிராணி ஆகியோர் தலைமையில், மானாமதுரை வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்டன் முன்னிலையில் பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் கூட்டங்கள் நடத்தப்பட்டு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதன்படி பேரூராட்சி பகுதிகளில் அனைத்து வார்டுகளிலும் தினமும் மானாமதுரை, நாட்டரசன்கோட்டை, இளையான்குடி, திருப்புவனம் ஆகிய பேரூராட்சிகளைச் சேர்ந்த துப்புரவு பணியாளர்களைக் கொண்டு ஒட்டுமொத்த துப்பரவு பணிகள் நடத்தப்படுகின்றன. குப்பைகள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டு, வடி கால்வாய்கள் சுத்தம் செய்யப்படுகின்றன.
சுகாதாரத்துறை, பேரூராட்சித்துறை, மஸ்தூர் பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மகளிர் சுயஉதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்கள் இணைந்து கொசுப்புழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பள்ளிகளில் டெங்கு குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து வார்டுகளிலும் இயந்திரம் மூலம் கொசு மருந்து அடிக்கப்பட்டு நிலவேம்புக்குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. பேரூராட்சி செயல் அலுவலர் ஜான்முகமது, துப்புரவு ஆய்வாளர் அபுபக்கர் நகரில் டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகளை தீவிரப்படுத்தி ஆய்வு செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.