சொந்தக் குழந்தையை அனாதை எனக் கூறி நாடகமாடிய தந்தை கைது

பெற்றெடுத்த 6 மாத குழந்தையை சாலையோரம் அனாதையாகக் கிடந்தது எனக் கூறி நாடகமாடிய தந்தை உள்பட இருவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
மீட்கப்பட்ட ஆறு மாத பெண் குழந்தையை மதுரை தத்து மையத்தின் பணியாளர்களிடம் ஒப்படைத்த சிவகங்கை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுவின் தலைவர் சரளா மற்றும் குழுவினர்
மீட்கப்பட்ட ஆறு மாத பெண் குழந்தையை மதுரை தத்து மையத்தின் பணியாளர்களிடம் ஒப்படைத்த சிவகங்கை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுவின் தலைவர் சரளா மற்றும் குழுவினர்


மானாமதுரை: பெற்றெடுத்த 6 மாத குழந்தையை சாலையோரம் அனாதையாகக் கிடந்தது எனக் கூறி நாடகமாடிய தந்தை உள்பட இருவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூருக்கு காரில் செல்லும்போது வழியில் திருப்பாச்சேத்தியில் சாலையோரத்தில் ஆறு மாத பெண் குழந்தை அனாதையாகக் கிடந்தது எனக் கூறி இரு இளைஞர்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனர். மேலும், அவர்கள் தங்களது சொந்த ஊர் மதுரை மாவட்டம் திருமங்கலம் என மருத்துவமனையில் தகவல் தெரிவித்தனர். 

இந்தக் குழந்தை குறித்து மாவட்ட குழந்தைகள் நலக் குழுவின் தலைவர் சரளா, குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலுவலர் சைமன் ராஜ், மாவட்ட குழந்தைகள் நலக் குழு உறுப்பினர்கள் ரசீந்திரக் குமார், ஜீவானந்தம், குழந்தைகள் பாதுகாப்பு அழகின் சமூகப் பணியாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் விஜயா ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் குழந்தையின் பெற்றோர்களே அந்தக் குழந்தையை வளர்க்க விருப்பமில்லாமல் அனாதை எனக் கூறி நாடகமாடி மருத்துவமனையில் ஒப்படைத்தது தெரியவந்தது.

இதையடுத்து, குழந்தையின் தந்தை என அறியப்பட்ட மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எருமாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் என்ற ஆனந்த குமாரை தொடர்பு கொண்ட குழந்தைகள் நலக் குழுவினர் விசாரணைக்கு வருமாறு கூறினர்.

இதையடுத்து ஆனந்தகுமார் மற்றும் குழந்தையை மருத்துவமனையில் ஒப்படைத்தவர்களில் ஒருவரான தர்மபாண்டி இருவரும் சிவகங்கை மாவட்ட குழந்தைகள் நலக் குழுவினர் முன்பு கடந்த சனிக்கிழமை நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். 

அப்போது இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் எருமாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார் (23) சுபாஷினி (21) இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். பின்னர் சுபாஷினிக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது.

திருமண வாழ்வில் கணவன் மனைவிக்கிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்தனர். அதன்படி கிராம பஞ்சாயத்தார் முன்னிலையில் ஆனந்தகுமார், சுபாஷினி இருவரும் சமரசமாக விவகாரத்து பெற்றுள்ளனர்.

அதைத் தொடர்ந்து, அவர்களது ஆறு மாத பெண் குழந்தையை தான் வளர்த்து கொள்வதாகக் கூறி தந்தை ஆனந்தகுமார் வாங்கி வந்துவிட்டார்.

ஆனால் ஆனந்த குமாரின் தந்தை பெரியசாமி இந்தக் குழந்தையை வளர்க்க விருப்பம் தெரிவிக்காததால் ஆனந்தகுமார், பெரியசாமி இருவரும் அந்தப் பெண் குழந்தையை அனாதையாக விட்டு விட முடிவு செய்துள்ளனர்.

இதற்கு உறவினர்கள் தர்ம பாண்டி, செல்வம் ஆகியோரின் உதவியை நாடியுள்ளனர். அதன் பின்னரே திருமங்கலத்திலிருந்து இடைக்காட்டூருக்கு காரில் செல்லும்போது குழந்தை திருப்பாச்சேத்தியில் சாலையோரத்தில் அனாதையாகக் கிடந்தது எனக் கூறி தர்மபாண்டி, செல்வம் இருவரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தையை ஒப்படைத்ததுதெரியவந்தது.

இதையடுத்து மாவட்ட குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலுவலர் சைமன் ஜார்ஜ் இச்சம்பவம் குறித்து புகார் செய்தார். 

அதைத் தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் விஜயா பரிந்துரையின் பேரில் குழந்தையின் தந்தை ஆனந்தகுமார், தாத்தா  பெரியசாமி உறவினர்கள் தர்ம பாண்டி, செல்வம் ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளில் காவல் துறையினர் வழக்கு பதிந்தனர்.

பின்னர் ஆனந்தகுமார் தர்மபாண்டி இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பெற்ற குழந்தையை அனாதை எனக் கூறி மருத்துவமனையில் ஒப்படைத்ததாக காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட தந்தை ஆனந்தகுமார் (வலது) இவரது உறவினர் தர்மபாண்டி (இடது)
பெற்ற குழந்தையை அனாதை எனக் கூறி மருத்துவமனையில் ஒப்படைத்ததாக காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட தந்தை ஆனந்தகுமார் (வலது) இவரது உறவினர் தர்மபாண்டி (இடது)

தலைமறைவாகி விட்ட பெரியசாமி, செல்வம் இருவரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதற்கிடையில் மீட்கப்பட்ட பெண் குழந்தையை  குழந்தைகள் நலப் பாதுகாப்புக் குழுவினர் பராமரிப்பிற்காக மதுரையிலுள்ள கிரேஸ் கென்னட் தத்து மையத்தில் ஒப்படைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com