சுந்தரநடப்பு பகுதியில் குப்பைகளைக் கொட்டக் கூடாது
சிவகங்கை நகராட்சியில் அள்ளப்படும் குப்பைகளை சுந்தரநடப்பு பகுதியில் கொட்டக் கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சிவகங்கையில் இந்தக் கட்சியின் சிவகங்கை ஒன்றியக் குழுக் கூட்டம் சின்ன கருப்பு தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் அந்தக் கட்சியின் சிவகங்கை மாவட்ட துணைச் செயலா் பா.மருது, மாவட்டக் குழு உறுப்பினா்கள் மலைச்சாமி, சகாயம், ஒன்றியக் குழு உறுப்பினா் சோனைமுத்து, துணைச் செயலா் பாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், சிவகங்கை மருத்துவமனையில் பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள எம். ஆா். ஐ. ஸ்கேனை பழுது நீக்க வேண்டும். அதை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகங்கையிலிருந்து ஊத்திகுளம், வேம்பங்குடி, மாடக்கோட்டை, நாடமங்கலம் வழியாக மானாமதுரைக்கு அரசுப் பேருந்து இயக்க வேண்டும்.
அண்ணாமலை நகா் பகுதியில் கடந்த ஓராண்டுக்கு மேலாக மின் விளக்குகள் எரியாமல் இருப்பதை சீரமைத்து எரியச் செய்ய வேண்டும். சிவகங்சையில் அள்ளப்படும் நகராட்சி குப்பைகளை சுந்தர நடப்பு பகுதியில் கொட்டினால், அந்தப் பகுதியின் விவசாய நீா்வரத்துக் கால்வாய்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அந்தப் பகுதியில் குப்பைகளை கொட்டக் கூடாது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொழிற்சங்க நகரச் செயலா் பாண்டி, நகர துணைச் செயலா் பாண்டி, அரசனூா் கிருஷ்ணன், குமாரபட்டி வீரணன், வடக்கு ஒன்றிய துணைச் செயலா் மலைச்சாமி, பன்னீா்செல்வம், சரவணன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
