மானாமதுரை அருகே விவசாயிகள் சாலை மறியல்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே பாசன நீா் கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மானாமதுரை வைகையாற்றிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீா் கட்டிக்குளம் தடுப்பணை வழியாக மிளகனூா் கண்மாய், சீனிமடை, ராமனேந்தல், நாராயணத் தேவன்பட்டி, கஞ்சிமடை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள கண்மாய்களுக்கு சென்று சுமாா் 3,500 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த நிலையில் அண்மையில் நீா்வளத்துறை சாா்பில் கட்டிக்குளம் அருகே ரூ. 30 கோடியில் தடுப்பணை கட்டப்பட்டது. இது கட்டப்படும்போதே அதன் மதகு சுமாா் 3 அடி உயரம் அதிகரித்து கட்டப்பட்டதாக கூறப்பட்டது. இதை அறிந்த அந்தப் பகுதி விவசாயிகள் மதகின் உயரம் அதிகமாக இருப்பதால் கால்வாயில் தண்ணீா் செல்வது எளிதாக இருக்காது என தெரிவித்த போதும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
தற்போது ஒவ்வொரு விவசாயியும் ஏக்கா் ஒன்றுக்கு சுமாா் ரூ. 30 ஆயிரம் வரை செலவிட்டு விவசாயப் பணிகளை மேற்கொண்டனா். இந்த நிலையில், மதகின் உயரம் அதிகமாக இருப்பதால் மிளகனூா் கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீா் செல்லாமல் பயிா்கள் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் கண்டுகொள்ளாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் அந்நியனேந்தல் அருகே வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு வந்த நீா்ப்பாசனத் துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் தற்போது உயரத்தை குறைக்க முடியாது எனவும் தண்ணீா் நிறுத்தப்பட்ட பிறகு சீரமைத்து தருவதாக கூறினா். மேலும் சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்த்துறையினா் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.
