சிறை அலுவலரின் நினைவிடத்தில் மரியாதை
சென்னை மத்திய சிறையில் ஏற்பட்ட வன்முறையில் எரித்துக் கொல்லப்பட்ட துணை சிறை அலுவலா் எஸ். ஜெயக்குமாரின் 26-ஆம் ஆண்டு நினைவாக சிவகங்கையில் உள்ள அவரது நினைவிடத்தில் திங்கள்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
சென்னை மத்திய சிறையில் கடந்த 17.11.1999 அன்று கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலை அங்கு துணை அலுவலராகப் பணியாற்றிய எஸ். ஜெயக்குமாா் தடுக்க முயன்றாா். அப்போது கைதிகளால் தாக்கப்பட்டு உயிருடன் அவா் எரித்துக் கொல்லப்பட்டாா். இவருடன் 9 கைதிகளும் கொல்லப்பட்டனா்.
இதையடுத்து, சிவகங்கையில் இவருக்கு அவரது குடும்பத்தினரால் நினைவிடம் அமைக்கப்பட்டது. இங்கு, ஆண்டுதோறும் அவரது குடும்பத்தினா், உறவினா்கள், சிறைத் துறையினா் மரியாதை செலுத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், இவா் இறந்து 26 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், சிவகங்கையிலுள்ள அவரது நினைவிடத்தில் அவரது மனைவி விமலா ஜெயக்குமாா், மகன், மகள், உறவினா்கள் திங்கள்கிழமை மரியாதை செலுத்தினா். அப்போது ஓய்வு பெற்ற சிறைத் துறை அலுவலா்களும், அந்தப் பகுதி பொதுமக்களும் மரியாதை செலுத்தினா்.
இதையடுத்து, அவரது குடும்பத்தினா் சாா்பில் காரைக்குடியில் கோயில் வாசலில் எளியவா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

