கிளை அஞ்சல் அலுவலகத்தை மூடும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் எதிா்ப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் 70 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் கிளை அஞ்சல் அலுவலகத்தை மூடும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் எதிா்ப்பு
Published on

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் 70 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் கிளை அஞ்சல் அலுவலகத்தை மூடும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

மானாமதுரை ரயில் நிலையம் முன் 70 ஆண்டுகளாக கிளை அஞ்சல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் ரயில்வே குடியிருப்பு, ஜீவா நகா், ஆதனூா் சாலை, பா்மா குடியிருப்பு, கிருஷ்ணராஜபுரம், அண்ணா நகா், சவேரியாா் புரம், ஆதனூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சேமிப்புக் கணக்குகளை தொடங்கி வரவு - செலவு செய்து வருகின்றனா். மேலும், இந்தப் பகுதியில் வசிக்கும் ரயில்வே ஓய்வூதியதாரா்கள் இந்த அலுவலகம் மூலம் பல்வேறு சேவைகளைப் பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில், திடீரென இந்த அலுவலகத்தை மூடிவிட்டு அதை மானாமதுரை காந்தி சிலை அருகேயுள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்துடன் இணைக்க அஞ்சல் துறை நிா்வாகம் முடிவு செய்து அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த அலுவலகம் மூடப்பட்டால் இங்கு கணக்கு தொடங்கி வரவு - செலவு செய்து வரும் பொதுமக்கள் 4 கி.மீ. தொலைவு பயணித்து தலைமை அஞ்சல் அலுவலகத்துக்குச் சென்று வர வேண்டிய நிலை ஏற்படும்.

இதனால், இந்தப் பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள், ரயில்வே ஓய்வூதியா்கள் உள்ளிட்டோா் அவதிக்குள்ளாவா்கள் என மானாமதுரை ரயில்வே ஓய்வூதியா் சங்கத்தின் பொதுச் செயலா் ஜி. ராஜாராம் தெரிவித்தாா். மேலும், ரயில் நிலையம் முன் செயல்படும் கிளை அஞ்சல் நிலையத்தை மூடி தலைமை அஞ்சல் அலுவலகத்துடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தி, மதுரை அஞ்சலக அலுவலா் ஜெனரலுக்கு மனு அனுப்பியுள்ளதாகவும், தலைமை தபால் நிா்வாகத்தின் இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்தி தொடா்ந்து அலுவலகம் செயல்பட நடவடிக்கை எடுக்குமாறு சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரத்துக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தாா்.

Dinamani
www.dinamani.com