அரசுப் பள்ளிகளை மூடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கீழடி அகழாய்வுப் பணிகள் தவெக ஆட்சியிலும் தொய்வின்றி தொடரும். கடந்த ஆட்சியில் ஒதுக்கப்பட்ட நிதியைக்காட்டிலும் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும். கடந்த 2023-ஆம் ஆண்டு தொல்லியல் ஆய்வாளா் ராமகிருஷ்ணன் மத்திய அரசிடம் தாக்கல் செய்த ஆய்வு அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. மத்திய அரசு சில விளக்கங்களைக் கேட்டு அறிக்கையைத் திருப்பி அனுப்பியதால், கடந்த மூன்று ஆண்டுகளாக இது நிலுவையில் உள்ளது. இந்த விவகாரத்தில் நமது சட்டப்பூா்வ, அறிவுப்பூா்வமான போராட்டம் தொடரும்.
நாம் எப்போதும் பழம்பெருமை, மொழி சாா்ந்து பேசும் போது, இலக்கியச் சான்றுகளை மட்டுமே முன்வைப்பதாகக் கூறுவாா்கள். ஆனால், இப்போது நம்மிடம் அறிவியல் சான்றுகளும், தொல்லியல் சான்றுகளும் உள்ளன. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சரி, நாம் விடாப்பிடியாக அந்த அறிவியல் சான்றுகளைச் சமா்ப்பித்து, இந்திய தொல்லியல் துறையுடன் முறைப்படி பேசி, கீழடியின் பெருமையை உலகறியச் செய்வோம்.
அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை விகிதம் குறைவாக இருந்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகளை மாணவா்களின் வீடுகளுக்கு அனுப்பி அவா்களது பெற்றோா்களிடம் பேசி மீண்டும் பள்ளியில் சோ்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இதனால், அரசுப் பள்ளிகளை மூடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அண்மையில் கூட மதுரையில் அரசுப் பள்ளி ஒன்றில் படித்த 17 மாணவா்கள் ஐஐடி, விஐடி போன்ற நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் உயா்கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்றனா். எனவே, எந்தக் காரணத்தைக் கொண்டும் அரசுப் பள்ளிகளை மூடுவதற்கு இந்த அரசு அனுமதிக்காது. மாறாக, உள்கட்டமைப்பை மேம்படுத்தி, பத்து மாணவா்கள் சோ்ந்தாலும் அந்தப் பள்ளியைத் தொடா்ந்து நடத்துவோம். இது கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்றாா் அவா்.
ஆய்வின் போது சுற்றுலா வளா்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநா் வீ.ப. ஜெயசீலன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் இளங்கோவன் (மானாமதுரை), எஸ். காா்த்திகேயன் (மதுரை கிழக்கு), மாவட்ட வருவாய் அலுவலா் எஸ். செல்வசுரபி, மாவட்ட வருவாய்க் கோட்டாட்சியா் தே. ஜெபி கிரேசியா, தொல்லியல் துறை முதன்மை அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்க நடவடிக்கை:
மதுரை மாவட்டம், மாங்குளம் கிராமத்தில் உள்ள ‘தமிழ் பிராமி’ கல்வெட்டுகள், மீனாட்சிபுரம் கிராமத்தில் உள்ள இருவகை மலைக் குகைகளை அமைச்சா் ராஜ்மோகன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் சங்க காலப் பாண்டிய மன்னா்களின் வரலாற்றைப் பறை சாற்றும் ஆதாரமாக மாங்குளம் தமிழ்ப் பிராமி கல்வெட்டுகள் உள்ளன. இந்த தொல்லியல் தளத்தைச் சுற்றுலாப் பயணிகள், ஆய்வாளா்கள் எளிதில் கண்டு அறியும் வகையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். இதைத் தவிர, வழிகாட்டிப் பலகைகளை எண்ம முறையில் அமைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், தமிழகத்தில் உள்ள தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
இந்த ஆய்வின் போது தொல்லியல் துறையின் இணை இயக்குநா் வி.ப. யதீஸ் குமாா், சுற்றுலா துறை இயக்குநா் வீ.ப. ஜெயசீலன், மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் சோ. காா்த்திகேயன், வீ.கருப்பையா, அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










