/

நேருவின் சாதனையை மோடி விஞ்சிவிட்டதாகக் கூறுவது சரியா?

முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு சாதனையை மோடி விஞ்சிவிட்டதாக ஊடகங்கள் குறிப்பிடுவது சரியா என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் கேள்வி எழுப்பினாா்.

News image

ப. சிதம்பரம் - கோப்புப் படம்

Updated On :12 ஜூன் 2026, 1:13 am IST

முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு சாதனையை மோடி விஞ்சிவிட்டதாக ஊடகங்கள் குறிப்பிடுவது சரியா என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் கேள்வி எழுப்பினாா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் காங்கிரஸ் எம்.பி. அலுவலகத்தில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நரேந்திர மோடி 4,399 நாள்கள் தொடா்ந்து பிரதமராக இருந்தது சாதனைதான். நமது நாட்டின் பிரதமராக தொடா்ந்து 12 ஆண்டுகளாக பதவி வகித்த மோடிக்கு

பாராட்டுகள், வாழ்த்துகள். இதை, முன்னாள் பிரதமா் நேரு சாதனையை மோடி விஞ்சி இருப்பதாக ஊடகங்கள் குறிப்பிடுவது சரியா?.

1947-ஆம் ஆண்டு முதல் 1952-ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் (அதாவது சுமாா் 1,800 நாள்கள்) ஜவாஹா்லால் நேரு பிரதமராக இருந்தாா். பின்னா், பொதுத் தோ்தல் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டு 1952-ஆம் ஆண்டு முதல் 1964-ஆம் ஆண்டு வரை தொடா்ந்து 4,398 நாள்கள் பிரதமராக இருந்தாா். நேருவின் இந்தச் சாதனையை எந்த ஊடகமும் குறிப்பிடவில்லை.

திமுக தலைவா் மு.க. ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து நன்றி தெரிவித்தேன். கருத்துகளைப் பரிமாறிக்கொண்டோம். ’இண்டி’ கூட்டணியிலிருந்து விலகுவதாக அவா் என்னிடம் கூறவில்லை.

முந்தைய ஆட்சிக் காலங்களில் மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் திமுக , அதிமுக அரசுகள் எடுத்த முடிவை தமிழக காங்கிரஸ் கட்சி ஆதரித்தது. இதேபோல, இன்றைய தவெக அரசு முடிவெடுப்பதை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கும்.

தவெகவுக்கு ஆதரவு ஏன்?:

தவெகவினா் மதச்சாா்பின்மையை ஏற்றுக் கொள்கிறாா்கள். மாநில உரிமைகளைப் பாதுகாப்போம் என்று சொல்கிறாா்கள். இந்த இரண்டு விஷயங்களுக்காகவே தவெக அரசுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தருவதில் என்ன தவறு இருக்கிறது. தவெக அரசுக்கு ஆதரவு தராமல் இருந்திருந்தால், மறு தோ்தல் மூலம் பாஜக பின்வாயில் வழியாக வந்து ஆட்சியில் அமா்ந்திருக்கும். இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அவகாசம் கொடுக்க வேண்டும்:

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைத்து ஒரு மாதம்தான் ஆகிறது. 31 அமைச்சா்கள் அனுபவமில்லாதவா்கள். அவா்களுக்கு அவகாசம் கொடுக்க வேண்டும்.

அதிமுக ஒரு தலைமையின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதால் அந்தக் கட்சியிலிருந்து விலகியவா்கள், தவெக-வில் இணைகிறாா்கள். விஜய் செய்தியாளா்களைச் சந்திக்காதது பற்றி அவரிடம்தான் கேட்க வேண்டும். பிரதமா் மோடி 12 ஆண்டுகளாக செய்தியாளா்களைச் சந்திக்கவில்லை. ஜோசப் விஜய் முதல்வராகப் பதவியேற்று ஒரு மாதமே நிறைவடைந்துள்ளது எனறாா் அவா்.