தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி பட்டய படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் செய்யும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
மாணவிகள் மட்டும் படிக்கும் செவிலியர் பட்டயப்படிப்பிற்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை முதல் தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் விநியோகம் செய்யப்பட்டது. தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் 2018-19 ஆம் ஆண்டிற்கான செவிலியர் பட்டயப் படிப்பிற்கான விண்ணங்கள் விநியோகம் செய்யும் பணி தொடங்கியது. தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதன்மையர் திருநாவுக்கரசு விண்ணப்பங்கள் விநியோகம் செய்யும் பணியை தொடங்கி வைத்து தெரிவித்தது: 17 வயது முதல் 35 வயதுக்குள்பட்ட மாணவிகள் செவிலியர் பட்டயப்படிப்பில் சேர்ந்து படிக்கலாம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவிகளைத் தவிர இதர பிரிவை சேர்ந்த மாணவிகள் 12 ஆம் வகுப்பு தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவிகள் 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதுமானது. இந்த செவிலியர் பட்டயப்படிப்பினை படிக்க விரும்புவோர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் செயலர், தேர்வுக்குழு சென்னை என்ற பெயரில் ரூ.300 க்கான வரைவோலை எடுத்து கொடுத்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவிகள் தங்களின் சான்றொப்பமிட்ட சாதிச்சான்றிதழின் 2 நகல்களை கொண்டு வந்து கொடுத்து விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்கள் ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக மற்ற அனைத்து நாள்களிலும் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் வருகிற 30 ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணிவரையில் வழங்கப்படும். பெறப்பட்ட விண்ணப்பங்களை முறையாக பூர்த்தி செய்து 31 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சென்னை தேர்வுக்குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றார்.
முதல் நாளான திங்கள்கிழமை 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் விண்ணப்பங்களை வாங்கி சென்றுள்ளதாக மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







