சீர்மரபினர் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான புள்ளி விவரங்களை ஆய்வு செய்து வருகிறோம் என ஆய்வுக் குழு தலைவரும், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலருமான அதுல்ய மிஸ்ரா தெரிவித்தார்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சீர்மரபினர் பழங்குடியினர் (டி.என்.டி.,) பெயர் மாற்றக் கோரிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.கூட்டத்துக்கு அதுல்ய மிஸ்ரா தலைமை வகித்தார். இதில் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் மற்றும் சீர்மரபினர் துறை அரசுச் செயலர் அ.கார்த்திக், பிற்பட்டோர் நலத் துறை இயக்குநர் எம்.மதிவாணன், மிகவும் பிற்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறை இயக்குநர் வி.சம்பத், வருவாய் நிர்வாக இணை ஆணையர் எம்.லட்சுமி, மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், சீர்மரபினர் பட்டியலில் உள்ள தங்களை சீர்மரபினர் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும், சீர்மரபினர் நல வாரியத் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த
வேண்டும், கமிஷன் பரிந்துரைகள் மற்றும் இடைக்கால பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சீர்மரபினர் சமுதாயத் தலைவர்கள், சீர்மரபினர் நலச் சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் வருவாய் நிர்வாக முதன்மைச் செயலர் அதுல்ய மிஸ்ரா கூறியதாவது: கடந்த 1979 ஆம் ஆண்டு சீர்மரபினர் சமுதாயப் பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அதற்கு முன் என்னென்ன பிரச்னைகள் இருந்தது, என்னென்ன வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது குறித்தும், இவர்களை சீர்மரபினர் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான சட்டப்பூர்வ ஆதாரங்கள் மற்றும் புள்ளி விவரங்களை ஆய்வு செய்து வருகிறோம்.
சீர்மரபினர் பழங்குடியினர் பட்டியலில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மாவட்டத்துக்கு மாவட்டம் வேறுபடுவதும் குறித்து எங்களது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எங்களது குழுவின் ஆய்வு அறிக்கையை வரும் பிப்ரவரி மாதம் அரசிடம் சமர்ப்பிக்க உள்ளோம் என்றார்.
பெரியகுளத்தில்: பெரியகுளம் அருகே எ.புதுப்பட்டியில் கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் அதுல்ய மிஸ்ரா தலைமையிலான குழுவினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர். அப்போது, எ.புதுப்பட்டி பொதுமக்கள் மற்றும் சீர்மரபினர் நலச்சங்க நிர்வாகிகள் தங்கள் சமுதாயத்தினரை டிஎன்சி பிரிவிலிருந்து டிஎன்டியாக மாற்றக்கோரி மனுக்களை அளித்தனர்.
அப்போது தேனி மாவட்ட ஆட்சியர் ம.பல்லவிபல்தேவ் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








