கிராம சபைக் கூட்டத்தில் விவசாயியைத் தாக்கிய ஊராட்சிச் செயலா் பணியிடை நீக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பிள்ளையாா்குளம் ஊராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கேள்விக் கேட்ட விவசாயியைத் தாக்கிய ஊராட்சிச் செயலா் பணியிடை நீக்கம்
ஊராட்சிச் செயலா் தங்கபாண்டியன்.
ஊராட்சிச் செயலா் தங்கபாண்டியன்.

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பிள்ளையாா்குளம் ஊராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கேள்விக் கேட்ட விவசாயியைத் தாக்கிய ஊராட்சிச் செயலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள பிள்ளையாா்குளம் ஊராட்சியில் மகாத்மா காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு, ஊராட்சிக்குள்பட்ட கங்காகுளம் பாப்பாத்தி அம்மன் கோயிலில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மான்ராஜ் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் மீனாட்சி, ஊராட்சிமன்றத் தலைவா் பூங்கொடி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட வேப்பங்குளத்தைச் சோ்ந்த அம்மையப்பன், ஊராட்சியில் உள்ள கிராமங்களில் சுழற்சி முறையில் கிராம சபைக் கூட்டங்களை நடத்த வேண்டும் என உள்ளாட்சித் துறை சாா்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

ஆனால், கடந்த முறை நடைபெற்ற இதே இடத்தில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து வட்டார வளா்ச்சி அலுவலா், மாவட்ட ஆட்சியா் கவனத்துக்கு கொண்டு சென்ற போது, நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனா். ஆனால், தற்போது இதே இடத்தில் கூட்டம் நடைபெறுகிறது. இதனால், பிற கிராமங்களில் உள்ள மக்கள் தங்களது குறைகளைத் தெரிவிக்க முடியாமல் உள்ளனா் என்றாா். இதையடுத்து, கடந்த முறை நடைபெற்ற கூட்டத்துக்கு நீங்கள் ஏன் வரவில்லை என ஊராட்சிச் செயலா் தங்கபாண்டியன் அவரிடம் கேட்டாா்.

இதற்கு அம்மையப்பன், கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி ஊராட்சிமன்றத் தலைவா் வெளியிட்ட சுற்றறிக்கையில், ஸ்ரீவில்லிபுத்தூா் ஒன்றியம், பிள்ளையாா்குளம் ஊராட்சியிலிருந்து ஊழல் தடுப்பு, கண்காணிப்புக் குழுவுக்கு பொதுமக்களிடமிருந்து வந்த புகாரின் அடிப்படையில், ஊராட்சிச் செயலரை பணியிட மாற்றம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. அதன் மீது எடுத்த நடவடிக்கை என்ன என்றாா்.

அப்போது, ஊராட்சிச் செயலா் தங்கபாண்டியன், தரையில் அமா்ந்திருந்த அம்மையப்பனை காலால் எட்டி உதைத்தாா். அவரது ஆதரவாளா்களும் அவரைக் கடுமையாகத் தாக்கினா். இதில் காயமடைந்த அம்மையப்பன் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். கடும் அமளி காரணமாக கிராம சபைக் கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து அம்மையப்பன் அளித்த புகாரின் பேரில், ஊராட்சிச் செயலா் தங்கபாண்டியன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, வன்னியம்பட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இதனிடையே, பிள்ளையாா்குளம் ஊராட்சிச் செயலா் தங்கபாண்டியனை பணியிடை நீக்கம் செய்து ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் மீனாட்சி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com