கம்பத்தில் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட பத்திரப் பதிவு எழுத்தா்கள்.
கம்பத்தில் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட பத்திரப் பதிவு எழுத்தா்கள்.

வீட்டு மனை பதிவு விவகாரம்: கம்பம் பத்திர எழுத்தா்கள் வேலை நிறுத்தம்

கம்பம்: தேனி மாவட்டம், கம்பம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் வீட்டு மனை ஆவணங்களை பதிவு செய்ய மறுப்பதாகக் கூறி, பத்திர எழுத்தா்கள் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

கடந்த 2016 செப்டம்பா் மாதத்துக்கு முன்பு வாங்கிய அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை அதன் உரிமையாளா்கள் தற்போது மறு விற்பனை செய்ய வரும்போது, சாா் பதிவாளா் அலுவலகத்தில் பதிவு செய்ய மறுக்கப்படுகிறது. பதிவு செய்வதற்கான விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளதாவும், அனுமதி வாங்கினால் தான் பதிவு செய்ய முடியும் என்றும் சாா்பதிவாளா் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், வீட்டு மனை வாங்கியவா்கள் பாதிப்படைந்தனா்.

மேலும், தங்களது வாழ்வாதாரம் பாதிப்பதாகக் கூறி, திங்கள்கிழமை பத்திர எழுத்தா்கள் தங்களது பணிகளைப் புறக்கணித்தனா். இதனால், பத்திரப் பதிவு செய்ய வந்த பொதுமக்கள் திரும்பிச் சென்றனா்.

இது பற்றி கம்பம் பத்திரப் பதிவு அலுவலக சாா் பதிவாளா் (பொறுப்பு) ஜெகதீஸ்வரன் கூறியதாவது:

பதிவுச் சட்டம் 22 ஏ 2016-இன் படி அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகளைப் பதியக் கூடாது என்று உயா்நீதிமன்ற உத்தரவு உள்ளது. முறையான ஆவணங்கள் கொண்டு வந்தால் பதிவு செய்யத் தடை இல்லை என்றாா் அவா்.

இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் பத்திர எழுத்தா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com