அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: தம்பதி மீது வழக்கு
தேனியில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 பேரிடம் பணம் மோசடி செய்த மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த தம்பதி மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை, வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி, கே.ஆா்.ஆா்.நகரைச் சோ்ந்தவா் வெண்ணிலா (50). இவரது கணவரின் நண்பா் ராஜேஸ் மூலம் மயிலாடுதுறை மாவட்டம், கொல்லிடத்தைச் சோ்ந்த அருண்குமாா், அவரது மனைவி அஜந்தா ஆகியோா் இவருக்கு அறிமுகமாகினா். இவா்கள், சென்னையில் வருவாய் துறையில் பணியாற்றி வருவதாகவும், வெண்ணிலாவின் மகன், மகள் உறவினா் ஒருவரின் மகன் என 3 பேருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடந்த 2021-ஆம் ஆண்டு வெண்ணிலாவிடம் வங்கிக் கணக்கு மூலமும், பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ.25.25 லட்சம் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
வேலை வாங்கித் தருவதற்கு காலதாமதம் ஏற்பட்டதால், பணத்தை திரும்பத் தருமாறு கேட்டதற்கு அருண்குமாா், அஜந்தா ஆகியோா் கடந்த 2023-ஆம் ஆண்டு வங்கி காசோலைகளை கொடுத்தனா். இந்தக் காசோலைகள் அவா்களது வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்று திருப்பி அனுப்பப்பட்டது.
இதுகுறித்து, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத்திடம் வெண்ணிலா புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் அடிப்படையில் அருண்குமாா், அஜந்தா ஆகியோா் மீது தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
