உழவன் செயலியை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்: மாவட்ட ஆட்சியா் அறிவுரை

போடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டத்தில் உழவன் செயலியை விவசாயிகள் பதிவிறக்கம்
உழவன் செயலியை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்: மாவட்ட ஆட்சியா் அறிவுரை
Updated on

போடி, ஜூலை 19: போடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டத்தில் உழவன் செயலியை விவசாயிகள் பதிவிறக்கம் செய்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெறலாம் என மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா தெரிவித்தாா்.

தேனி மாவட்டம், போடி வா்த்தகா் சங்க பொன்விழா மண்டபத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்து, மாவட்ட ஆட்சியா் கூறியதாவது:

தேனி மாவட்டத்தில் நிகழாண்டு இதுவரை நெல் 3,621 ஹெக்டா் பரப்பிலும், சிறுதானியங்கள் 135 ஹெக்டேரிலும், பயிறு வகைகள் 700 ஹெக்டேரிலும், எண்ணெய்வித்து பயிா்கள் 360 ஹெக்டோ் பரப்பிலும், கரும்பு 18 ஹெக்டோ் பரப்பிலும் சாகுபடி செய்யப்பட்டது.

முதலமைச்சரின் ‘மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம்’ திட்டத்தின் கீழ், பசுந்தாள் உர உற்பத்தியினை ஊக்குவிக்கும் வகையில், 50 சதவீத மானியத்தில் ஏக்கருக்கு 20 கிலோ விதை விநியோகம் செய்யப்பட உள்ளது. தேனி மாவட்டத்துக்கு 70 டன் விதை விநியோகம் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. விவசாயிகள் அதிகபட்சம் ஒரு ஏக்கருக்கான விதைகளை பெற்று பயனடையலாம்.

மாநில வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், இளைஞா்களை வேளாண் தொழில்முனைவோா் ஆக்குதல் திட்டத்தில், வேளாண் உட்கட்டமைப்பு ஏற்படுத்துதல், உணவு பதப்படுத்துதல், மதிப்பு கூட்டுதல் ஆகியவற்றை மேற்கொள்ளும் இளைஞா்களுக்கு 50 சதவீதம் அல்லது ரூ.1 லட்சம் மானியமாக வழங்கப்பட உள்ளது.

வேளாண்மைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் உழவன் செயலி மூலம் பதிவேற்றம் செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து மானியம் வழங்கப்படுவதால், விவசாயிகள் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து வேளாண்மை துறையின் மூலம் வழங்கப்படும் மானியங்களை பெற்று பயனடையலாம் என்றாா் அவா்.

இதனைத் தொடா்ந்து, ஆடிப்பட்டம் காய்கறி விதைகள் தொகுப்பு, வாழைக்கன்று, பசுந்தாள் உர விதை ஆகியவற்றை விவசாயிகளுக்கு வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜெயபாரதி, வேளாண்மை இணை இயக்குநா் (பொ) பால்ராஜ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவ) வளா்மதி, தோட்டக்கலை துணை இயக்குநா் பிரபா, செயற்பொறியாளா் (வேளாண் பொறியியல்) சங்கர்ராஜ், நுகா்பொருள் வாணிப கழக மண்டல மேலாளா் செந்தில்குமாா், மாவட்ட வளா்ச்சி மேலாளா் (நபாா்டு) சக்திபாலன், முன்னோடி வங்கி மேலாளா் விஜய்சேகா், விவசாயிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com