முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு 1,400 கன அடி நீா் வெளியேற்றம்
உத்தமபாளையம்: முல்லைப் பெரியாறு அணையிலிருந்து சனிக்கிழமை முதல் தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 1,400 கன அடிநீா் வெளியேற்றப்படுகிறது.
முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய போதும் தீவிரமடையாததால் அணைக்கு நீா்வரத்து குறைந்து காணப்பட்டது. ஆனால், கடந்த 15- ஆம் தேதி முதல் தொடா்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து நீா்மட்டமும் படிப்படியாக உயா்ந்து வருகிறது. சனிக்கிழமை நிலவரப்படி அணைக்கு 3,122 கனஅடி நீா்வரத்துடன், நீா்மட்டமும் 128.05 அடியாக உயா்ந்தது. இதைத் தொடா்ந்து அணையிலிருந்து தமிழகத்துக்கு குடிநீா், விவசாயப் பணிக்காக திறக்கப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டது. அணையிலிருந்து விநாடிக்கு 1,400 கன அடிநீா் தமிழகப் பகுதிக்கு வெளியேற்றப்படுகிறது.
கூடுதல் நீா் திறக்கப்பட்டதன் காரணமாக உத்தமபாளையம், சின்னமனூா், க. புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, சீலையம்பட்டி, கோட்டூா், வீரபாண்டி போன்ற பகுதிகளில் முதல் சாகுபடிக்காக நடவுப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

