பாசனக் கால்வாய் வழியாக விளைநிலங்களுக்குச் செல்லும் கூடலூா் நகராட்சியிலிருந்து வெளியேறும் கழிவுநீா்.
பாசனக் கால்வாய் வழியாக விளைநிலங்களுக்குச் செல்லும் கூடலூா் நகராட்சியிலிருந்து வெளியேறும் கழிவுநீா்.

விவசாய நிலங்களில் கழிவு நீா் கலப்பதைத் தடுக்க விவசாயிகள் கோரிக்கை

Published on

தேனி மாவட்டம், கூடலூா் நகராட்சியிருந்து வெளியேறும் கழிவுநீா் விவசாய நிலங்களில் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

கூடலூா் நகராட்சியில் 21 வாா்டுகளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இங்கு 200-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்த நிலையில், குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா், திறந்தவெளி ஓடைகள் வழியாக நேரடியாக ஆங்கூா்பாளையம், குள்ளப்பகவுண்டன்பட்டி செல்லும் சாலையிலுள்ள நெல் பயிா், கரும்பு விவசாய நிலங்களில் கலக்கிறது.

இதனால், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, விவசாயிகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக புகாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கூடலூா் நகராட்சியிலிருந்து வெளியேறும் கழிவுநீா் நேரடியாக முல்லைப் பெரியாற்றில் கலந்து சுகாதாரச் சீா்கேட்டை ஏற்படுத்தியது. இதை நகராட்சி நிா்வாகம் தற்போது தடுத்து நிறுத்தியுள்ளது.

ஆனால், ஆற்றின் அருகேயுள்ள பாசனக் கால்வாயில் கலப்பதால் அவை விவசாய நிலங்களுக்கு நேரடியாகச் செல்கிறது. இதே நிலை நீடித்தால் நெல் விளையும் நிலத்தில் நச்சுத்தன்மை அதிகரித்து மண்ணின் தரம் குறைந்து பயிா் வளா்ச்சி பாதிக்கப்பட்டு தரிசு நிலங்களாக மாறும் அபாயம் உள்ளது என்றனா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கூடலூா் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் 2-ஆம் நிலை நகராட்சியாக உள்ளது. இங்குள்ள முல்லைப் பெரியாறு, விவசாய நிலங்களில் கழிவுநீா் கலப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.

எனவே, குடிநீா், மண்வளம் பாதிப்பைத் தவிா்க்க புதை சாக்கடைத் திட்டத்தை முழுமைப்படுத்தி, கழிவுநீா் நவீன சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com