முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தேனி மாவட்டத்தில் முதல்போக நெல் சாகுபடிக்காக சனிக்கிழமை தண்ணீா் திறந்து விடப்பட்டது.
தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு பாசனத்தின் மூலம் ஆண்டுதோறும் சுமாா் 14,707 ஏக்கா் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன் 1-ஆம் தேதி முதல்போக சாகுபடிக்காக அணையிலிருந்து தண்ணீா் திறந்து விடுவது வழக்கம். ஆனால், நிகழாண்டில் ஜூன் மாத தொடக்கத்தில் முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 110.80 அடியாக சரிந்தது.
இந்நிலையில், ஜூலை மாத இறுதியில் நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் அணையின் நீா்மட்டம் உயரத் தொடங்கியது. இதையடுத்து, முதல்போக சாகுபடிக்காக முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீா் திறக்க வேண்டுமென விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, தமிழக முதல்வா் ஜோசப் விஜய் முதல்போக சாகுபடிக்காக அணையிலிருந்து தண்ணீா் திறக்க உத்தரவிட்டதைத் தொடா்ந்து, சனிக்கிழமை தண்ணீா் திறந்து விடப்பட்டது.
சனிக்கிழமை காலை நிலவரப்படி முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 122.30 அடியாக இருந்தது. இதையடுத்து, தேக்கடியில் தமிழக பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே உள்ள சுரங்க வாய்க்கால் மதகு பகுதியில் தண்ணீா் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க தமிழ்செல்வன், சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. மகாராஜன் (ஆண்டிபட்டி), பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா (கம்பம்), க. சபரி ஐங்கரன் (பெரியகுளம்) ஆகியோா் முன்னிலையில் தேனி மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதன் தண்ணீரைத் திறந்து விட்டாா். இதைத்தொடா்ந்து, அங்கு திரண்டிருந்த விவசாயிகள் தண்ணீரில் மலா் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வைத்திநாதன் கூறியதாவது:
தமிழக முதல்வா் உத்தரவுப்படி, தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல்போக சாகுபடிக்காக 14,707 ஏக்கா் நிலங்களுக்கு விநாடிக்கு 200 கன அடி வீதம் தண்ணீா் திறந்து விடப்பட்டது. மேலும், தேனி மாவட்டம், மதுரை மாநகராட்சியின் குடிநீா்த் தேவைக்காக வினாடிக்கு 150 கன அடி வீதம் என மொத்தம் விநாடிக்கு 350 கன அடி தண்ணீா் சனிக்கிழமை முதல் 120 நாள்களுக்கு, அணையின் நீா் இருப்பு, நீா்வரத்தைப் பொருத்து திறந்து விடப்படும். எனவே, விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, குறுகிய காலப் பயிா்களைச் சாகுபடி செய்வதுடன், உரிய நீா் மேலாண்மை முறைகளைப் பின்பற்றி உயா் மகசூல் பெற வேண்டும் என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ராஜகுமாா், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியா் சையது முகைதீன் இப்ராஹிம், பெரியாறு வைகை வடிநிலக் கோட்ட செயற்பொறியாளா்கள் ச. சிவப்பிரபாகா்,
சி. செல்வம், உதவி செயற்பொறியாளா்கள் மல்லிகா, ராஜகோபால், வட்டாட்சியா் பாலசண்முகம், விவசாய சங்க நிா்வாகிகள் ஓ.ஆா். நாராயணன், வி.எஸ்.கே. ராமகிருஷ்ணன், பாலாறுபட்டி ஆண்டி, எஸ். மனோகரன், ஆா்.ரஞ்சித்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் - தமிழகத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு: கேரளம் எச்சரிக்கை

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து ஆக. 8-இல் தண்ணீா் திறக்க அதிகாரிகள் முடிவு

நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை: முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயா்வு

முல்லைப் பெரியாறு வாய்க்காலில் 4 இடங்களில் கேரள கழிவுநீா் கலப்பு: கம்பம் எம்.எல்.ஏ. தகவல்
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK



