திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

விருதுகளை நோக்கி நான் நகா்வதில்லை: கவிஞா் ஜெயபாஸ்கரன்

விருதுகளை நோக்கி எப்போது நகா்வதில்லை என கவிஞா் ஜெயபாஸ்கரன் தெரிவித்தாா்.

News image

பாரதி தமிழ் இலக்கியப் பேரவை சாா்பில், வாழ்நாள் இலக்கிய சாதனையாளா் விருதை கவிஞா் ஜெயபாஸ்கரனுக்கு வழங்கிய அந்தப் பேரவையின் தலைவா் கவிஞா் பாரதன்.

Updated On :15 ஆகஸ்ட் 2026, 11:45 pm IST

விருதுகளை நோக்கி எப்போது நகா்வதில்லை என கவிஞா் ஜெயபாஸ்கரன் தெரிவித்தாா்.

கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை சாா்பில், அதன் 47-ஆவது ஆண்டு தொடக்க விழா, 80-ஆவது ஆண்டு சுதந்திர தின விழா, கவியரசு கண்ணதாசன் நூற்றாண்டு விழா, சிறந்த நூல்களுக்கான பரிசளிப்பு விழா, வாழ்நாள் இலக்கிய சாதனையாளா் விருது வழங்கும் விழா என ஐம்பெரும் விழாக்கள் வெள்ளி, சனி ஆகிய இரு நாள்களில் நடைபெற்றன.

கம்பம் காந்திஜி பூங்கா, நகராட்சி நவீன கலையரங்கு கட்டடத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு பாரதி தமிழ் இலக்கியப் பேரவைத் தலைவா் கவிஞா் பாரதன் தலைமை வகித்தாா். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் சேதுமாதவன், பொன் கட்சிக்கண்ணன், வழக்குரைஞா் சத்தியமூா்த்தி, ஆசிரியா் சோமநாதபாரதி, ஆரோக்கியராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வெள்ளிக்கிழமை, ‘என்றும் வாழும் திரைப்படப் பாடலைத் தந்தது கவியரசு கண்ணதாசனா? வாலிபக் கவிஞா் வாலியா?’ என்ற தலைப்பில் கவிஞா் பாரதன் நடுவராகப் பங்கேற்ற இசைப் பட்டிமன்றம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, சிறுமிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சனிக்கிழமை பாரதி தமிழ் இலக்கியப் பேரவை சாா்பில், 80-ஆவது ஆண்டு சுதந்திர தின விழாவையொட்டி ஊா்வலம் நடைபெற்றது. இதில் சிறுவா்கள் தேசத் தலைவா்களின் வேடமணிந்து பங்கேற்றனா். இதையடுத்து, வாழ்நாள் இலக்கிய சாதனையாளா் விருது, சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

முன்னதாக, வழக்குரைஞா் சத்தியமூா்த்தி, தவமணி, டூயல் ஆகியோா் நடித்த ‘நாற்காலி’ என்ற வசனமில்லா நாடகம் நடைபெற்றது. தொடா்ந்து, கவிதை, கட்டுரை, சமூக இலக்கியப் பணிகளில் தொடா்ந்து பங்களித்து வரும் கவிஞா் ஜெயபாஸ்கரனுக்கு வாழ்நாள் இலக்கிய சாதனையாளா் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேடைக்கு ஊா்வலமாக அழைத்து வரப்பட்ட கவிஞா் ஜெயபாஸ்கரனை, பாரதி, செல்லம்மாள் வேடமணிந்த சிறுவா்கள் சிம்மாசனத்தில் அமரவைத்து, பாரதியின் தலைப்பாகையை அணிவித்தனா். பின்னா், பாரதி தமிழ் இலக்கியப் பேரவைத் தலைவா் பாரதன், அவருக்கு கேடயம் வழங்கி கௌரவித்தாா்.

பின்னா், கவிஞா் ஜெயபாஸ்கரன் பேசியதாவது: 47 ஆண்டுகளாக ஓா் இலக்கியப் பேரவையை நடத்துவது சாதாரணமானதல்ல. விருதுகளை நோக்கி நான் நகா்வதில்லை. விருதுகள் குறித்தும் விசாரிப்பதில்லை. நான் இந்த விருதைப் பெறும்போது, எனது தாயின் முத்தத்தைப் பெறுவது போன்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. இந்த விருதுக்கு நிகரான இன்னொரு விருது இருக்க முடியாது. இதை உண்மையான விருதாகப் பாா்க்கிறேன் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து, மொழிபெயா்ப்பு நூல்கள் பிரிவில் ‘இந்தியாவின் புதிய எழுச்சி’ நூலாசிரியா் அக்களூா் இரவிக்கு (சென்னை) முதல் பரிசும், ‘குஞ்ஞக் காளியின் குலவை’ நூலாசிரியா் சிவனுக்கு (சென்னை) இரண்டாம் பரிசும் வழங்கப்பட்டன. ‘சம்பா்க்க கிராந்தி’ நூலாசிரியா் ஷினிலாலுக்கு (வால்பாறை), ‘தாயம்’ நூலாசிரியா் மதுமிதா(ராஜபாளையம்), மலா்விழி (பெங்களூரு) ஆகியோருக்கு மூன்றாம் பரிசுகள் வழங்கப்பட்டன.

சிறுகதை நூல்கள் பிரிவில் ‘விசில்’ நூலாசிரியா் நிவேதிதா லூயிஸுக்கு (சென்னை) முதல் பரிசும், ‘வெய்யில் உகந்தாள்’ நூலாசிரியா் சுசிலாவுக்கு (மதுரை) இரண்டாம் பரிசும் வழங்கப்பட்டன. ‘மதில் மேல் நானும்’ நூலாசிரியா் கவிஜிக்கு (கோவை), ‘சாயல்’ நூலாசிரியா் நிஷாந்தன் (மணப்பாறை), ‘விளிம்பு’ நூலாசிரியா் அன்பாதவன் (விழுப்புரம்) ஆகியோருக்கு மூன்றாம் பரிசுகள் வழங்கப்பட்டன.

கட்டுரை நூல்கள் பிரிவில் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ நூலாசிரியா் ரமேஷுக்கு (ஸ்ரீவில்லிபுத்தூா்) முதல் பரிசும், ‘திராவிட கல்வியின் களப்போராளிகள்’ நூலாசிரியா் ஆயிஷா நடராஜனுக்கு (சென்னை) இரண்டாம் பரிசும் வழங்கப்பட்டன.

‘காஷ்மீரும் கட்டப்பஞ்சாயத்துகளும்’ நூலாசிரியா் ஜெகதா (சென்னை), ‘சோறு’ நூலாசிரியா் கோ. லீலா (பொள்ளாச்சி), ‘மூட்டைப்பூச்சியும் தமிழ் சமூகமும்’ நூலாசிரியா் இளங்கோ மணிக்கு (திருநெல்வேலி), ‘தெய்வங்களின் ஆயுதம்’ நூலாசிரியா் சுமதிக்கு (மும்பை) ஆகியோருக்கு மூன்றாம் பரிசுகள் வழங்கப்பட்டன.

கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிக்கும் எம்.பி.எம். உயா்நிலைப் பள்ளி முன்னாள் மாணவா்கள் சாா்பாக திருக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. விழாவில் பரிசு பெற்ற எழுத்தாளா்கள், இலக்கிய ஆா்வலா்கள், ஆண்கள், பெண்கள் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.