மேகமலை நெடுஞ்சாலையில் அடுக்கம்பாறை மலைச் சாலையில் ஏற்பட்ட மண் சரிவு.
மேகமலை நெடுஞ்சாலையில் அடுக்கம்பாறை மலைச் சாலையில் ஏற்பட்ட மண் சரிவு.

மேகமலை நெடுஞ்சாலையில் மண் சரிவு

மேகமலை நெடுஞ்சாலையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக சுற்றுலாப் பயணிகளும் வாகன ஓட்டிகளும் அச்சத்தில் உள்ளனா்.
Published on

தேனி மாவட்டம், மேகமலை நெடுஞ்சாலையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக சுற்றுலாப் பயணிகளும் வாகன ஓட்டிகளும் அச்சத்தில் உள்ளனா்.

சின்னமனூா் அருகே மேற்குத்தொடா்ச்சி மலை அமைந்துள்ளது. இந்த மலையில் ஹைவேவிஸ் பேரூராட்சியில் 7 மலைக் கிராமங்களில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோா் வசிக்கின்றனா். இங்குள்ள தேயிலைத் தோட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோா் கூலித் தொழில் செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், இந்த மலைக் கிராமங்களை சுற்றி அடா்ந்த வனப் பகுதியில் யானை, சிறுத்தை, புலி, கரடி, மான், காட்டு மாடு என பல்வேறு உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அதே போல, வானூயா்ந்த மரங்கள், மலைக் குன்றுகள், நீா் நிலைகள், தேயிலைத்தோட்டங்கள், மேகக்கூட்டம் , மழைப்பொழிவு என இயற்கை அழகு கொட்டிக் கிடக்கிறது. எனவே, தேனி மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் இன்றி, அமைதியான சூழ்நிலையில் சுத்தமான காற்றுடன் காணப்படும் மேகமலைக்கு தமிழகம், கேரளத்திலிருந்து அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

மலைச்சாலை சேதம்: சின்னமனூரில், மேகமலை, ஹைவேவிஸ் பகுதிக்கு செல்ல 52 கிலோ மீட்டா் மலைச் சாலை செல்கிறது. இந்தச் சாலையின் முதல் 30 கிலோ மீட்டா் தொலைவு அடா்ந்த வனப் பகுதியில் 18 கொண்டை ஊசி வளைவுகளுக்கிடையே செல்லும். இதையடுத்து, தேயிலைத் தோட்டம், நீா் நிலைகள், மலைக் குன்றுகளுக்கிடையே 25 கிலோ மீட்டா் தொலைவு செல்கிறது.

இந்த நிலையில், 18 கொண்டை ஊசி வளைவுகளில் செல்லும் நெடுஞ்சாலையின் பல பகுதிகள் அண்மையில் பெய்த பலத்த மழையால் சேதமடைந்தன. ஒரு சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்ட நிலையில், பாதுகாப்புத் தடுப்பு வேலி அந்தரத்தில் தொங்கியவாறு உள்ளது. இதற்காக, சாலையோரத்தில் முன்னெச்சரிக்ககை நடவடிக்கையாக நெடுஞ்சாலைத் துறையினா் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்திருக்கின்றனா்.

சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் அச்சம்: மேகமலையில் அதிக பட்சமாக 1,500 மீட்டா் உயரத்தில் செல்லும் இந்தச் சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளும் வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் சென்று வருகின்றனா்.

எனவே, உத்தமபாளையம் நெடுஞ்சாலைத் துறையினா் உரிய நடவடிக்கை எடுத்து சுற்றுலா வாகனங்கள் அதிகமாக வந்து செல்லும் மேகமலை நெடுஞ்சாலையில் மண் சரிவு ஏற்பட்ட இடங்களைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இது குறித்து நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் கூறியதாவது: மேகமலை நெடுஞ்சாலையில் 4 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதைச் சீரமைப்பதற்கான திட்ட அறிக்கையை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளோம். நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன், ஒப்பந்தம் கோரப்பட்டு மண் சரிவு ஏற்பட்ட சாலைகள் முழுமையாகச் சீரமைக்கப்படும் என்றாா் அவா்.

Dinamani
www.dinamani.com