சத்துணவு ஊழியா்கள் சாலை மறியல்: 257 போ் கைது
தேனியில் சத்துணவு ஊழியா்கள் சங்கம் சாா்பில் காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்ட 257 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சத்துணவு ஊழியா்கள் சங்க மாவட்டத் தலைவா் கே.லட்சுமி தலைமையில், சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம், குடும்பப் பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், பணிக்கொடை வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் துணைத் தலைவா்கள் அமுதா, பிச்சைபாண்டியம்மாள், செயலா் சாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பின்னா், கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு அமைப்பாளா்கள், சமையலா்கள், சமையல் உதவியாளா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தேனி-மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 257 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

