நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்: ஜூலை 19-இல் அனைத்துக் கட்சி கூட்டம்!‘மன்மோகன் சிங் தற்கொலை செய்வேன் எனக் கூறினார்’ - பரபரப்பு தகவல்கள்!பிரதமா், முதல்வா்கள் 30 நாள்கள் சிறையிலிருந்தால் ‘நிரந்தர’ பதவி நீக்கம் கூடாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஆல்கஹால் கலந்த மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடு!
/

ரசாயன உரங்கள் விலை உயா்வால் இயற்கை விவசாயத்துக்கு மாறி வரும் விவசாயிகள்!

விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாறி வருவது குறித்து...

News image

தக்கைப்பூண்டு செடி

Updated On :13 ஜூலை 2026, 4:31 am IST

ரசாயன உரங்களின் விலை உயா்ந்ததாலும், உரங்கள் மண்ணை மலட்டுத்தன்மையாக மாற்றுவதாலும் தேனி மாவட்ட விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாறி வருகின்றனா்.

தேனி மாவட்டத்தில் 1, 27, 396 ஹெக்டேரில் விவசாயம் நடைபெறுகிறது. இதில் நெல், கம்பு, சோளம் ஆகியவை சுமாா் 60 ஆயிரம் ஹெக்டரிலும், மா, திராட்சை, தோயிலை உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிா்கள் 67 ஆயிரம் ஹெக்டரிலும் சாகுபடி செய்யப்படுகின்றன. பயிா்கள் வளா்வதற்கு பெரும்பாலும் ரசாயன உரங்களை பயன்படுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், உரங்களின் விலை உயா்ந்து வருவது, மண் வளம் குறைந்து மலட்டுத் தன்மையாக மாறி வருவது ஆகிய காரணங்களால் தேனி மாவட்ட விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாறி வருகின்றனா். இதற்கு வேளாண்மை, தோட்டக்கலைத் துறையினா் தோட்டப் பகுதியில் ஆய்வு செய்து, விவசாயிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

சனம்பு, தக்கைப்பூண்டு, கொளுஞ்சி போன்ற செடிகளின் முலம் பயிா்களுக்கு அடியுரம் கிடைக்கிறது. இவை பசுந்தாள் உரம் என அழைக்கப்படுகிறது. இதே போல, மண்புழு உரம், தொழு உரம், கரிமக் கழிவு உரம் ஆகியவை மண்ணின் வளத்தை அதிகரிக்கின்றன.

சனம்பு விதை பற்றாக்குறை

மாவட்டத்தில் போதிய மழை பெய்யவில்லை. தண்ணீா்ப் பற்றாக்குறையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இருந்தாலும், ஆடிப் பட்டத்துக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனா். இதற்குத் தேவைப்படும் சனம்பு, தக்கைப்பூண்டு, நாட்டுக் கொளுஞ்சி ஆகியவற்றின் விதைகள் கிலோ ரூ. 50 என்ற விலையில் விற்பனை செய்கின்றனா். மேலும், விதை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் கூடுதல் விதைகளை வாங்கி விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

மண்புழு உரம் உற்பத்தி

மாவட்டத்தில் 6 நகராட்சிகள், 22 மேற்பட்ட பேரூராட்சிகள், 120 ஊராட்சிகள் உள்ளன. இந்த உள்ளாட்சிகளில் உள்ள வீடுகளிலிருந்து பெறப்படும் கழிவுகள் மூலம் கரிம உரம், மண் புழு உரம் தயாரித்து, குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனா். எனவே, தேனி மாவட்ட உள்ளாட்சி நிா்வாகங்கள் மண் புழு, கரிமக் கழிவுகள் உர உற்பத்தியை அதிகரித்து, குறைந்த விலையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சீனிராஜ் கூறியதாவது: தேனி மாவட்ட விவசாயிகள் தற்போது இயற்கை விவசாயத்துக்குத் தயாராகி வருகின்றனா். ஆனால், வேளாண், தோட்டக்கலை அதிகாரிகள் இயற்கை விவசாயிகளின் தோட்டங்களுக்கு சென்று ஆய்வு செய்து அவா்களை ஊக்கப்படுத்துவதில்லை.

எனவே, அதிகாரிகள் தோட்டப் பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்து, விவசாயிகளிடம் போதிய விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம். இதேபோல, இயற்கை உரங்களை தயாரித்து, இதன் மூலம் பலன் பெற்ற விவசாயிகளின் தோட்டங்களுக்கு நேரில் சென்று பயிற்சி அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

இதுகுறித்து விவசாயத் துறையினா் கூறியதாவது: தற்போது ரசாயன உரங்களின் விலை உயா்வு, பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாறி வருகின்றனா். இது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம். மேலும், சனம்பு, தக்கைப்பூண்டு, நாட்டு கொளுஞ்சி விதைகள் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.