சாத்தூர் அருகே சாலையின் ஓரத்தில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சாத்தூர் அருகே வெங்கடாசலபுரம் பஞ்சாயத்திற்குள்பட்ட, சிவகாசி செல்லும் சாலையின் ஓரத்தில் இறைச்சிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் அதிகளவில் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றன.
சிவகாசி மற்றும் அவ்வழியாக செல்லும் கிராமத்தினர் பேருந்து, இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் சாத்தூரிலிருந்து இந்த பகுதியை கடந்து தான் செல்ல வேண்டும்.
எனவே இறைச்சிக்கழிவுகள் கொட்டப்படுவதால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இவ்வழியாகச் செல்லும் பொது மக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
மேலும் இங்கு கொட்டப்படும் குப்பைகள் அடிக்கடி தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இதனால் ஏற்படும் புகை மூட்டம் காரணமாகவும் அப்பகுதியினர் கடும் சுவாச பிரச்னைகளுக்கு உள்ளாகும் நிலை உள்ளது. மேலும் இறைச்சிக் கழிவுகளால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.
எனவே இப்பகுதியில் சாலையின் ஓரத்தில் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.