ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் தண்ணீர் சுத்திகரிப்பு ஆலையை மூட வலியுறுத்தி, கிராம மக்கள் தங்களது குழந்தைகளை 3-வது நாளாக புதன்கிழமையும் பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேலத்தொட்டியப்பட்டியில் தனியாருக்குச் சொந்தமான இரு தண்ணீர் சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன.
இந்த ஆலையிலிருந்து வெளிவரும் கழிவு நீரால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாகவும், ஏராளமானோருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பல மாதங்களாக கிராம மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். மேலும், பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக மதுரையிலிருந்து சிறப்பு அரசு மருத்துவக் குழுவினர் மேலத்தொட்டியப்பட்டிக்கு வந்து, பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதில் 200-க்கும் மேற்பட்டோரை அவர்கள் பல்வேறு ஆய்வுக்குட்படுத்தினர். அவர்களில் 7 பேருக்கு கல்லடைப்பு உள்ளிட்ட சில பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது.
இது குறித்து மருத்துவக் குழுவினர் கூறுகையில், "பயன்படுத்தப்பட்ட எண்ணெயில் சுடப்படும் வடை உள்ளிட்டவற்றை சாப்பிட்டால் கூட இதுபோன்ற பாதிப்பு ஏற்படும்' என்றனர்.
தண்ணீர் சுத்திகரிப்பு ஆலை நிர்வாகி கூறியதாவது:
இங்கிருந்து வெளியேறும் கழிவு நீரில் 25 ஏக்கரில் விவசாயம் செய்கிறோம். மேலும், இங்கு உற்பத்தி செய்யப்படும் நீர் குறித்த பகுப்பாய்வு மாதிரி மாதந்தோறும் எடுக்கப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்படுகிறது.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இப்பகுதியை தொடர்ந்து ஆய்வு செய்து அதற்கான அறிக்கைகளும் உள்ளன. முறையான எல்லா ஆவணங்களுடன் அரசு அனுமதியுடன் இந்த தண்ணீர் சுத்திகரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இது உண்மையிலேயே பாதிப்பை ஏற்படுத்துவதாக இருந்தால் ஆலையை
மூடுவதற்கு தயாராக உள்ளோம் என்றார்.
இந்நிலையில், மேலத்தொட்டியபட்டி கிராமத்தினர், ஆலையை மூடும் வரை தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை என கடந்த திங்கள்கிழமை முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டம் 3-வது நாளாக புதன்கிழமையும் தொடர்ந்தது.
இதனால், தொடக்கப் பள்ளியில் படிக்கும் 96 மாணவர்கள், மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 112 மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் உள்ளனர். ஆலையை மூடாவிட்டால் ஊரை காலி செய்துவிட்டு செல்ல உள்ளதாகக் கிராம மக்கள் கூறி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








