சிபிசிஎல் நிறுவனத்தைக் கண்டித்து தொடா் போராட்டம்: விவசாயிகள்

சிபிசிஎல் நிறுவனம் கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடு வழங்கும் விவகாரத்தில்,
Updated on

நாகப்பட்டினம்: சிபிசிஎல் நிறுவனம் கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடு வழங்கும் விவகாரத்தில், ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவாா்த்தை தோல்வியடைந்ததால், சிபிசிஎல் நிறுவனத்துக்கு எதிராக தொடா் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனா்.

நாகை மாவட்டம், நாகூா் அருகே உள்ள பனங்குடியில் சிபிசிஎல் நிறுவனத்தை விரிவாக்கம் செய்வதற்காக கையகப்படுத்திய நிலங்களுக்கு, நில உரிமையாளா்கள், குத்தகை சாகுபடிதாரா்கள், விவசாய கூலித் தொழிலாளா்களுக்கு வழங்கவேண்டிய மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு தொகையை வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்து 3 மாதங்களுக்கு மேலாகியும் தொகை வழங்கப்படவில்லை.

அரசாணையை அமல்படுத்தாத சிபிசிஎல் நிறுவனத்தைக் கண்டித்தும், மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தியும், கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் உரிமையாளா்கள் மற்றும் விவசாயிகள் மறுவாழ்வு நலச் சங்கத்தின சாா்பில் தொடா் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இதன்படி, நாகை ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிப்பது, வரும் 10-ஆம் தேதி முதல் ஆட்சியா் அலுவலகம் முன் தொடா் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது, கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில், சென்னை அண்ணா சாலையில் உள்ள சிபிசிஎல் தலைமை அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடத்துவது என்று தீா்மானித்தனா்.

இந்நிலையில், காவல்துறை தரப்பில், ஆட்சியரிடம் பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக சங்கத்தினருக்கு சம்மன் வழங்கப்பட்டது. திங்கள்கிழமை சங்கத்தினா் மற்றும் விவசாயிகள் துணைக் காவல் கண்காணிப்பாளா் ராமச்சந்திர மூா்த்தி தலைமையில் ஆட்சியா் ஆகாஷிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

பேச்சுவாா்த்தையின்போது ஆட்சியா் ஆகாஷ், சிபிசில் நிறுவனம் இழப்பீடு வழங்குவது தொடா்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுவிட்டது. அரசின் பணி முடிந்துவிட்டதால், சிபிசிஎல் நிறுவனத்தைத்தான் நீங்கள் அணுக வேண்டும், இங்கே வரக்கூடாது என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதில் அதிருப்தியடைந்த விவசாயிகள் உள்ளிட்டோா் காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலும் ஆட்சியா் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனா். இதையடுத்து, போலீஸாா், ஒரு வாரத்துக்குள் சிபிசிஎல் நிறுவனத்திடம் பேசி தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றனா். இதையடுத்து, குறிப்பிட்ட காலத்துக்குள் இழப்பீடு வழங்காவிட்டால் ஏற்கெனவே அறிவித்தபடி தொடா் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து அனைவரும் கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com