விளையாட்டு, யோகாவுக்கு தினமும் ஒரு மணிநேரம் ஒதுக்க வேண்டும்: அமைச்சர் ஆர். கமலக்கண்ணன்
விளையாட்டு அல்லது யோகாவுக்கு நாள்தோறும் ஒரு மணிநேரம் மாணவர்கள் ஒதுக்க பழகிக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் கேட்டுக்கொண்டார்.
விளையாட்டு அல்லது யோகாவுக்கு நாள்தோறும் ஒரு மணிநேரம் மாணவர்கள் ஒதுக்க பழகிக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் கேட்டுக்கொண்டார்.
புதுச்சேரி மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் பங்கேற்ற தடகள விளையாட்டுப் போட்டிகள் காரைக்கால் விளையாட்டு மைதானத்தில் கடந்த 3 நாள்கள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில் புதுச்சேரி வேளாண் மற்றும் கல்வித்துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் கலந்துகொண்டு பரிசு, சான்றிதழ் வழங்கிப் பேசியது :
மாணவர்களுக்கு உடலளவிலும், மனதளவிலும் நல்ல ஆரோக்கியத்தை தருவது விளையாட்டாக இருக்கிறது. புதுச்சேரி மாநில அரசு, மாணவர்களுக்கு சிறந்த முறையில் கல்வியுடன் கூடிய விளையாட்டுக்கான சூழல்களை ஏற்படுத்தித் தருகிறது. இந்நிகழ்ச்சியில் பேசிய கடலோரக் காவல்படை கமாண்டன்ட் நாகேந்திரன், விளையாட்டு வீரர்களாக இருப்போருக்கான உயர்கல்வி வாய்ப்பு, வேலைவாய்ப்பு குறித்து தெளிவாக பேசினார். இவரது கருத்து மாணவர்களை நல்ல முறையில் ஊக்கப்படுத்தியது காணும்போது மகிழ்ச்சியாக இருந்தது. விளையாட்டால் ஒருவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது என்பதை மட்டும் மாணவர்கள் தெளிவாக உணர வேண்டும்.
விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்கள், தமக்கு எதிர்காலம் உண்டு, வேலைவாய்ப்பு உண்டு என கொள்வது ஒருபுறமிருந்தாலும், இதனால் உடல் ஆரோக்கியம் ஏற்படுகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். தற்காலத்தில் 40 முதல் 50 வயதுக்குள்ளான ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு நோய் ஏற்பட்டுவருவதை பார்க்கிறோம்.
விளையாட்டு அல்லது யோகா பயிற்சியில் தொடர்ந்து ஈடுபடுவோருக்கு இவ்வாறான பாதிப்புகள் அவ்வளவாக விரைவாக வருவதில்லை. எனவே, மாணவர்கள் அனைவரும் தினமும் ஒரு மணிநேரமாவது விளையாட்டு அல்லது யோகா பயிற்சியில் ஈடுபட வேண்டும். அரசு சார்பிலும், பிற அமைப்பு மூலமாக வேண்டும். இதற்கான கட்டமைப்புகள் இருப்பதை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றார் அமைச்சர்.
நிகழ்ச்சியில், காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கே.ஏ.யு. அசனா, மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன், இந்திய கடலோரக் காவல்படை காரைக்கால் மைய கமாண்டன்ட் நாகேந்திரன், கல்வித்துறை துணை இயக்குநர் (பொ) கேசவ், விளையாட்டுத் துறை துணை இயக்குநர் எம். லெனின்ராஜ், கல்வித்துறை வட்ட துணை ஆய்வாளர்கள் கார்த்திகேசன், பொன். சௌந்தரராசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் காரைக்கால், புதுச்சேரி, மாஹே, யேனாம் பிராந்தியங்கள் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. ஒரு மண்டலத்துக்கு 78 பேர் வீதம் போட்டியில் கலந்துகொண்டனர். கல்வித்துறை சார்பில் தங்குமிடம், உணவு உள்ளிட்ட வசதிகள் மாணவர்களுக்கு செய்துத் தரப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






