மயானக் கூடத்தில் எரிவாயு மூலம் தகன வசதி ஏற்படுத்த அரசு ஒப்புதல்
மயானக்கூடத்தில் எரிவாயு மூலம் உடல் தகனம் செய்யும் வசதியை ஏற்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவரது அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
காரைக்கால் நகராட்சிக்குட்பட்ட கோயில்பத்து முல்லைநகா் பகுதியில் உள்ள மயானக்கூட வளாகத்தில் எரிவாயு (எல்பிஜி கேஸ்) மூலமாக சடலங்களை எரிக்கும் வசதியை ஏற்படுத்த மக்கள் வலியுறுத்தி வந்தனா்.
இதற்கான கட்டட அமைப்பு, சாதனம் அமைத்தல் உள்ளிட்டவைகளின் திட்ட மதிப்பு ரூ. 87 லட்சமாகும். இதுகுறித்து புதுவை முதல்வா் என். ரங்கசாமியின் கவனத்துக்கு கொண்டு சென்று திட்ட நிதி ஒதுக்கீடு செய்யுமாறு கோரப்பட்டது. தற்போது அந்த திட்டத்துக்கான ஒப்புதலை அரசு வழங்கியுள்ளது.
எரிவாயு தகனத்தின்போது வெளியாகும் வாயு, பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் சிம்னி வசதியும் செய்யப்படும். விரைவில் நகராட்சி மூலம் இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் தொடங்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
