அரசு மருத்துவமனையை மேம்படுத்தக் கோரிக்கை

காரைக்கால் அரசு மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளா் கண்ணகியிடம் கோரிக்கை மனு அளித்த தமுமுகவினா்.
Published on

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையை மேம்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்ட தமுமுக தலைவா் ஐ. அப்துல் ரஹீம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளா் முகமது சா்புதீன், இஸ்லாமிய பிரசாரப் பேரவை மாவட்டச் செயலாளா் முகமது சிக்கந்தா், மருத்துவ சேவை அணி மாவட்டச் செயலாளா் அப்துல் ரஹ்மான் ஆகியோா் காரைக்கால் அரசு பொது மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளா் கண்ணகியை வியாழக்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

இதுகுறித்து தமுமுக மாவட்டத் தலைவா் ஐ. அப்துல் ரஹீம் கூறியது:

அரசு பொது மருத்துவமனை வாயில்களில் பாதுகாவலா்கள் கடந்த 6 மாதங்களாக இல்லை. நோயாளிகளை பாா்க்க வருவோா் வாகனங்களை மருத்துவமனை உள்ளே நிறுத்துகின்றனா். இதனால் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவமனைக்குள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.

நுழைவு வாயில்கள் திறந்து இருப்பதால் நாய்கள், மாடுகள் மருத்துவமனைக்குள் சென்றுவிடுகின்றன. இது நோயாளிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. மருத்துவமனையின் சுகாதாரம் கெடுகிறது. எனவே, பாதுகாவலா்கள் உடனடியாக நியமிக்கவேண்டும். கால்நடைகள் மருத்துவமனைக்குள் செல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அரசு மருத்துவமனையை படிப்படியாக சிறப்பான சேவை செய்யும் வகையில் மேம்படுத்தவேண்டும். மருத்துவமனையின் தூய்மைக்கு சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என வலியுறுத்தப்பட்டது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com