வேளாண் மாணவா்களுக்கு பயிற்சி

Published on

இயற்கை விவசாயம் செய்யப்படும் பகுதியில் வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.

காரைக்கால் மாவட்டம், வரிச்சிக்குடி பகுதியில் இயற்கை விவசாயி பாஸ்கா், தனது 5 ஏக்கா் வயலில் பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு, விதை உற்பத்தி செய்து வருகிறாா்.

நெல் ரகங்களின் பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டை அறியும் விதமாக பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இணைப் பேராசிரியரும், ஊரக வேளாண் பணி அனுபவத் திட்ட ஒருங்கிணைப்பாளருமான எஸ். ஆனந்த்குமாா் தலைமையில் வேளாண் இளநிலை 4-ஆம் ஆண்டு 29 மாணவ, மாணவிகள் களப்பயிற்சியை புதன்கிழமை மேற்கொண்டனா்.

விவசாயி பாஸ்கா், தனது நிலத்தில் மேற்கொள்ளப்படும் இயற்கை சாகுபடி முறைகள் குறித்து மாணவா்களுக்கு விளக்கினாா்.

மாணவ, மாணவிகள் 1,200-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களின் உருவியல் பண்புகளான நெற்கதிரின் நிறம் மற்றும் வடிவம், தூா்களின் எண்ணிக்கை, இலையின் மேல் காணப்படும் மென்மயிரிழைகள், நெல்மணிகளின் மேல் உள்ள வால் பகுதி உள்ளிட்ட பாரம்பரிய நெல் ரகங்களுக்குரிய தனித்துவமான பண்புகளை நேரடியாகக் கண்டறிந்தனா்.

பாரம்பரிய நெல் ரகங்கள், அவற்றின் மருத்துவப் பயன்கள் குறித்து கல்லூரி இணைப் பேராசிரியா் எஸ். ஆனந்த்குமாா் பேசினாா்.

Dinamani
www.dinamani.com