சாலை விபத்தில் கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழப்பு

காரைக்காலில் இருசக்கர வாகன விபத்தில் கல்லூரி மாணவா்கள் இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.
Published on

காரைக்கால்: காரைக்காலில் இருசக்கர வாகன விபத்தில் கல்லூரி மாணவா்கள் இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு, பஞ்சாட்சாரபுரம் பகுதியைச் சோ்ந்தவா் அா்ஜூன்ராம் (20). நெடுங்காடு பகுதியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் இளநிலை இறுதியாண்டு படித்து வந்தாா். இவரது நண்பா் காரைக்கால் பகுதியைச் சோ்ந்த தா்மராஜ் (21) அதே கல்லூரியில் படித்து வந்தாா்.

இந்தநிலையில், வியாழக்கிழமை மாலை இருவரும் இருசக்கர வாகனத்தில் காரைக்கால் கடற்கரைக்குச் சென்றுள்ளனா். வாகனத்தை தா்மராஜ் வேகமாக ஓட்டியுள்ளாா். கடற்கரை அருகே வ.உ.சி. புறவழிச்சாலையில் சென்றபோது, திடீரென பிரேக் பிடித்தபோது, இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து இருவரும் சாலையில் விழுந்து, சிறிது தொலைவு இழுத்துச் செல்லப்பட்டு முன்னால் சென்ற ஆட்டோவில் மோதினா். இதில் தலை உள்ளிட்ட இடங்களில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

அப்பகுதியில் இருந்த மக்கள் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

இதுகுறித்து காரைக்கால் நகர போக்குவரத்துக் காவல்நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Dinamani
www.dinamani.com