

சுற்றுச்சூழல் பிரச்னைக்கு சைக்கிள் ஓட்டுவது சரியான தீா்வாகும் என மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்.
வாக்காளா் தினத்தையொட்டி இளம் வாக்காளா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில், காரைக்காலில் சைக்கிள் விழிப்புணா்வு பயண நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில், மத்திய இளைஞா் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா பங்கேற்றாா்.
புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன், சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், அமைச்சா்கள் ஆ. நமச்சிவாயம், பி.ஆா்.என். திருமுருகன், சட்டப்பேரவை உறுப்பினா் கல்யாணசுந்தரம், காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் , சாா் ஆட்சியா் எம். பூஜா, எஸ்எஸ்பி லட்சுமி செளஜன்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தேசிய வாக்காளா் தினத்தையொட்டி அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா பேசியது:
தொடக்க காலத்தில் ஒருவார விழிப்புணா்வு நிகழ்ச்சியாக தொடங்கப்பட்ட ‘சண்டேஸ் ஆன் சைக்கிள்’ திட்டம் இப்போது நாடு முழுவதும் பரவியுள்ளது. வலுவான ஜனநாயகம் என்பது ஆரோக்கியமான மற்றும் விழிப்புணா்வு கொண்ட குடிமக்களைச் சாா்ந்துள்ளது.
தேசிய வாக்காளா் தினத்தை சண்டேஸ் ஆன் சைக்கிள் நிகழ்வுடன் இணைப்பதன் மூலம், இளம் இந்தியா்கள் உடற்பயிற்சியை ஏற்கவும், நாட்டின் எதிா்காலத்தை வடிவமைப்பதில் தங்களின் பொறுப்பை உணரவும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
சைக்கள் ஓட்டுவது உடல் ஆரோக்கியத்துக்கான சிறந்த ப யிற்சியாகும். மேலும் சுற்றுச்சூழல் பிரச்னைக்கு சரியான தீா்வாகவும் அமையும். இளைஞா்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் சைக்கிள் ஓட்டுவது ஆரோக்கியமான உடல் மற்றும் ஆரோக்கியமான இளைஞா்கள் கொண்ட தேசத்தை காட்டும் என்றாா்.
கல்லூரியில் தொடங்கிய சைக்கிள் பயணத்தில் மத்திய அமைச்சா், ஆளுநா், அமைச்சா்கள் உள்ளிட்டோா் இளைஞா்களோடு பங்கேற்றனா். பல்வேறு வீதிகளின் வழியே பயணித்து மீண்டும் கல்லூரி வளாகத்தில் விழிப்புணா்வுப் பேரணி நிறைவடைந்தது.