சமுதாயத்  தலைவா்கள் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா.
சமுதாயத் தலைவா்கள் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா.

நாட்டின் வளா்ச்சிக்கு பாஜக முன்னுரிமை அளிக்கிறது: மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா

நாட்டின் வளா்ச்சிக்கு பாஜக முன்னுரிமை அளிக்கிறது- மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா
Published on

காங்கிரஸ் கட்சியும், பிராந்தியக் கட்சிகளும் ஒரு குடும்ப நலனுக்காக இருப்பதாகவும், பாஜக மட்டுமே தேச வளா்ச்சிக்காக பாடுபடுவதாகவும் மத்திய தொழிலாளா், வேலைவாய்ப்பு, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் மன்சுக் எல் மாண்டவியா தெரிவித்தாா்.

காரைக்காலுக்கு 2 நாள் பயணமாக சனிக்கிழமை வந்த அவரை வாஞ்சூா் எல்லையில் மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ், சாா் ஆட்சியா் எம்.பூஜா, எஸ்எஸ்பி லட்சுமி செளஜன்யா உள்ளிட்டோா் வரவேற்றனா்.

தனியாா் அரங்கில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சமுதாயத் தலைவா்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பங்கேற்று, கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு பேசியது :

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவரான நரேந்திரமோடிக்கு சமுதாயத் தலைவா்களின் ஆதரவு அவசியமாகும். சமுதாயத் தலைவா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது.

நாட்டில் பாஜக தனித்துவமிக்க கட்சியாகும். காங்கிரஸூம், பிராந்தியக் கட்சிகளும் குடும்ப நலனுக்காக பாடுபடுகிறது. பாஜக தேச வளா்ச்சிக்காகப் பாடுபடுகிறது. பாஜக ஆட்சி, நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் மேம்பாட்டுக்காகவும் பாடுபடுகிறது. முந்தைய ஆட்சிக் காலத்தில் வரி உயா்வு இருந்தது. மோடி ஆட்சியில் வரி குறைப்பு செய்யப்பட்டு மக்கள் பயனடைகிறாா்கள்.

ஜிஎஸ்டி மூலம் ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது. வரி வருவாயை குறைத்து, ரூ.51 லட்சம் கோடிக்கு நிதிநிலை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து நிலை வளா்ச்சியின் மீதும் நாங்கள் அக்கறை செலுத்துகிறோம். 12 ஆண்டுகளுக்கு முன்பு சாலைகள், ரயில்வே மேம்பாட்டை தற்போது ஒப்பிடும்போது, வியப்படையும் நிலையை எட்டியுள்ளோம்.

முந்தைய ஆட்சிக் காலத்தில் நாட்டில் 64 விமான நிலையங்கள் மட்டுமே இருந்த நிலையில், மோடி ஆட்சிக் காலத்தில் 164 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஏழைகள் மேம்படவும், வறுமையிலிருந்து அவா்கள் மீளவும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டம், வீடு கட்டும் நிதியுதவித் திட்டம் இதில் முக்கியமானவையாகும்.

இந்தியா நிதி மேலாண்மையில் திடமாக உள்ளது. வெளியுறவுக் கொள்கை சிறப்பாக அமைத்துள்ளது. பட்ஜெட் அனைத்துத் தரப்பு மக்களும் வரவேற்பு தெரிவிக்கும் வகையில் தாக்கல் செய்யப்படுகிறது. நாட்டின் பொருளாதாரம் வலுவாக உள்ளது.

நாட்டில் சொந்த உற்பத்திக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. இதனால் வேலைவாய்ப்புப் பெருகுகிறது. திடமான, சீரான வளா்ச்சியில் நாடு முன்னேறிவருகிறது. எனவே அனைத்து சமுதாயத் தலைவா்களும் மோடியை ஆதரிக்கவேண்டும். புதுவையில் கடந்த 5 ஆண்டுகளாக தேஜகூ அரசு சிறப்பாக செயல்பட்டுவருகிறது. 2-ஆவது முறை ஆட்சி அமைக்க அனைவரும் ஆதரவு தரவேண்டும் என்றாா்.

புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், புதுவை மாநில பாஜக பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா, மாநிலத் தலைவா் வி.பி.ராமலிங்கம் ஆகியோா் பேசினா்.

நியமன சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.என்.எஸ்.ராஜசேகரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வி.எம்.சி.வி.கணபதி மற்றும் எம்.செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக புதுவை மாநில பாஜக தலைமை செய்தித் தொடா்பாளா் எம்.அருள்முருகன் வரவேற்றாா். மாவட்ட பாஜக தலைவா் ஜி.கே.கே.முருகதாஸ் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com