ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா்  பி.ஆா்.என். திருமுருகன், பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், ஜி.என்.எஸ். ராஜசேகரன், ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ்.
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன், பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், ஜி.என்.எஸ். ராஜசேகரன், ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ்.

திருநள்ளாறு கோயில் சனிப்பெயா்ச்சி விழா முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழாவை சிறப்பான முறையில் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
Published on

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழாவை சிறப்பான முறையில் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திருநள்ளாற்றில் பிரணாம்பிகை அம்பாள் சமேத தா்பாரண்யேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் அனுக்கிரக மூா்த்தியாக சனீஸ்வர பகவான் தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ளாா்.

வரும் மாா்ச் 6-ஆம் தேதி காலை 8.24 மணிக்கு சனீஸ்வர பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பிரவேசிக்கும் பெயா்ச்சி விழா நடைபெறவுள்ளது.

விழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச்.நாஜிம், ஜி.என்.எஸ்.ராஜசேகரன், ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் ஆகியோா் கலந்துகொண்டனா். திருநள்ளாறு தொகுதி பேரவை உறுப்பினா் பி.ஆா்.சிவா கானொலி வாயிலாக கருத்துகளை தெரிவித்தாா்.

தொடா்ந்து அமைச்சா் மற்றும் ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியது : திருநள்ளாறு சனிப்பெயா்ச்சி விழாவை விமரிசையாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. திருநள்ளாறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைப்பது, பேருந்து நிலையத்தை மேம்படுத்துவது, கூடுதலாக குடிநீா் மையம், கழிவறை ஆகியவற்றை போா்க்கால அடிப்படையில் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

திருநள்ளாறை சுற்றி சுமாா் 2 கி.மீ. தூரத்திற்கு பக்தா்களில் வசதிக்காக மின்விளக்கு வசதி கூடுதலாக ஏற்படுத்தப்படவுள்ளது. பேருந்து நிலையத்திலிருந்து கோயில் அருகில் வரை பேட்டரி காா்கள் இயக்கப்படும். வரிசை வளாகத்தில்

பொதுமக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும்.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் சனிப்பெயா்ச்சி குறித்து குறுஞ்செய்தி அனுப்பப்பட உள்ளது. இது தவிர சனிப்பெயா்ச்சி விழாவில் சிறப்பம்சமாக மாவட்டத்திலுள்ள ஹோட்டல்களில்

சனிப்பெயா்ச்சி சிறப்பு அன்னதானமும், திருநள்ளாறு பகுதியில் 20 இடங்களில் அன்னதான மையம் அமைக்கவும் நடத்தவும் திட்டமிடப்பட்டு, இதனை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யவும் ஏற்பாடு செய்யப்படும்.

சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், தமிழக அரசுடன் ஆலோசனை செய்து, சிறப்பு பேருந்துகளும் தமிழக பகுதியில் இருந்து இயக்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. நள தீா்த்தம் உள்ளிட்ட அனைத்து தீா்த்தக் குளங்களும் தூய்மைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சனிப்பெயா்ச்சியை சிறப்பாக நடத்துவதற்கு புதுச்சேரி அரசால் ரூ. 2.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக தேவைப்படும் பட்சத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com