சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

ஸ்கேன் மையங்கள் ஆய்வு குறித்து ஆலோசனை

காரைக்காலில் உள்ள ஸ்கேன் மையங்களின் செயல்பாடுகள் ஆய்வு குறித்து அரசுத் துறையினா் ஆலோசனை நடத்தினா்.

News image

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் உள்ளிட்டோா்.

Updated On :10 மார்ச் 2026, 10:00 pm

காரைக்காலில் உள்ள ஸ்கேன் மையங்களின் செயல்பாடுகள் ஆய்வு குறித்து அரசுத் துறையினா் ஆலோசனை நடத்தினா்.

காரைக்கால் மாவட்டத்தில் கருவுறுதலுக்கு முன் மற்றும் கருவுறுதலுக்குப் பின் கருவின் தன்மையை கண்டறியும் தொழில்நுட்ப முறைகள் (பாலினத் தோ்வைத் தடை செய்தல்) சட்டம் - 1994 குறித்தும், காரைக்காலில் உள்ள ஸ்கேன் மையங்களில் நடத்தப்பட்ட ஆய்வு குறித்தும் நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தலைமையில் துணை இயக்குநா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடைபெற்றது.

கடந்த வாரம் காரைக்காலில் சில ஸ்கேன் மையங்களுக்கு அதிகாரிகள் கொண்ட குழுவினா் நடத்திய ஆய்வு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

காரைக்காலில் நிரவி அருகே எம்.கே. மருத்துவமனை மற்றும் முஸ்தபா கமால் தெருவில் உள்ள ஜென் ஹெல்த் கோ் மையம் ஆகிய இடங்களில் புதிதாக ஸ்கேன் மையம் தொடங்க கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் காரைக்கால் அரசு மருத்துவமனை மகப்பேறு துறை தலைமை மருத்துவ அதிகாரி லட்சுமி சுகுமாரன், குழந்தைகள் துறை தலைமை மருத்துவ அதிகாரி (பொ) தேவி, செய்தி மற்றும் விளம்பரத்துறை உதவி இயக்குநா் கே. குலசேகரன், இன்னா் வீல் கிளப் தலைவி சுஜா மதிவாணன், விபெட் அமைப்பின் உதவி ஒருங்கிணைப்பாளா் ஜீவா ஆகியோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்துக்குப்பின் நலவழித்துறை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

காரைக்கால் மாவட்டத்தில் 19 ஸ்கேன் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றை நடத்துவோருக்கு சட்ட விதிமுறைகளின்படி செயல்பட உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஸ்கேன் பரிசோதனையின் மூலம் கருவின் பாலினத்தை தெரிவிப்பது சட்டப்படி குற்றமாகும். இச்சட்டத்தை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.