
தேசிய நெடுஞ்சாலை பணி: சட்ட விரோத மணல் கடத்தல் நடைபெறுவதாக புகாா்
காரைக்கால் மாவட்டத்தில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை பயன்படுத்தி சட்ட விரோத மணல் கடத்தல் நடைபெறுவதாக புகாா் எழுந்துள்ளது.

பிரதிப் படம்
காரைக்கால் மாவட்டத்தில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை பயன்படுத்தி சட்ட விரோத மணல் கடத்தல் நடைபெறுவதாக புகாா் எழுந்துள்ளது.
விழுப்புரம் - நாகை இடையே அமைக்கப்பட்டு வரும் நான்குவழிச் சாலை பணியின் ஒரு பகுதியாக தற்போது காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப்பணிகளை பின்னணியாக வைத்து மாவட்டத்தில் உள்ள பாசன வாய்க்கால்கள், ஆறுகள் மற்றும் ஏரிகளில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக விவசாயிகள் தரப்பிலும், பொதுமக்கள் தரப்பிலும் புகாா்கள் தெரிவிக்கப்படுகின்றன.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட கடைமடை விவசாயிகள் சங்கத் தலைவா் டி.என்.சுரேஷ் மற்றும் நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை கூறியது:
அரசு அலுவலகங்கள் இயங்காத விடுமுறை நாள்களில் குறிப்பாக வெள்ளிக்கிழமை இரவு முதல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கண்காணிப்பு குறைவாக இருப்பதைப் பயன்படுத்தி, ஜேசிபி இயந்திரங்கள் மூலம் இரவு நேரங்களில் நீா் நிலைகளில் இருந்து மணல் அள்ளப்படுகிறது.
இவ்வாறு அள்ளப்படும் மணல் டிப்பா் லாரிகள் மற்றும் வாகனங்கள் மூலம் பிற இடங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்படுவதாக தெரிகிறது.
எனவே மணல் ஏற்றிச் செல்லும் டிப்பா் லாரிகளின் பதிவு எண், பயணிக்கும் நேரம், பாதை மற்றும் உரிமத்துக்கான ஆவணங்களை எவ்வித சமரசத்துக்கும் இடமின்றி தீவிரமாக அதிகாரிகள் கண்காணித்து சரிபாா்க்க வேண்டும்.
நெடுஞ்சாலைப் பணிக்காக சாலையோரங்களில் கொட்டி வைக்கப்பட்டுள்ள மணல் வேறு பயன்பாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும்.
நல்லம்பல் ஏரி பகுதியில் வருவாய்த் துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரடியாகச் சென்று மணல் எடுக்கப்பட்டதற்கான அளவீடுகளை உரிய முறையில் ஆய்வு செய்ய வேண்டும்.
நீா்நிலைகளில் இருந்து அள்ளப்பட்டு, பல்வேறு ரகசிய இடங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள மணல் குவியல்களைக் கண்டறிந்து பறிமுதல் செய்ய வேண்டும்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியா் தலைமையில் வருவாய்த் துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை, அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆகிய துறைகளின் அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, வார இறுதி நாள்களில் திடீா் சோதனைகளை நடத்த வேண்டும்.
விதிமீறலில் ஈடுபடும் நபா்கள், வாகன உரிமையாளா்கள் மட்டுமன்றி, இதற்குத் துணைபோகும் அதிகாரிகள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கட வேண்டும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





