பிகார் முதல்வர் பதவிலிருந்து விலகுகிறேன்! நிதீஷ் குமார் அறிவிப்பு!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

சீர்காழி அருகே கார் மோதி கர்ப்பிணி உள்ளிட்ட மூவர் பலி

சீர்காழி அருகே கார் மோதியதில் கர்ப்பிணி பெண் உள்ளிட்ட மூவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image
சீர்காழி அருகே கார் மோதி கர்ப்பிணி உள்ளிட்ட மூவர் பலி
Updated On :10 ஆகஸ்ட் 2021, 12:56 pm

DIN

சீர்காழி அருகே கார் மோதியதில் கர்ப்பிணி பெண் உள்ளிட்ட மூவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கிழாய் கிராமத்தைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் (36). இவர் கர்ப்பிணியான தனது மனைவி தமிழ்வாணி (30) என்பவரை பரிசோதனைக்காக வைதீஸ்வரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துவிட்டு டூவீலரில் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது கற்கோயில் உடையாம்பாளையம் என்ற இடத்தில் எதிரே அதிவேகமாக வந்த கார் அவர்களது வாகனம் மீது மோதியதில் கர்ப்பிணியான தமிழ்வாணியும் அவரது கணவர் புருஷோத்தமனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Story image

தொடர்ந்து நிற்காமல் வேகமாக சென்ற கார் 100 நாள் வேலை முடித்துவிட்டு சாலையோரம் நடந்து சென்ற உடையாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொன்னையன் மனைவி தையல்நாயகி (52) சந்திரகாசு மனைவி ராணி (60) ஆகியோர் மீது மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.

இதனையடுத்து காரை நிறுத்திவிட்டு அதன் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். விபத்தை கண்ட அப்பகுதி மக்கள் ஓடி வந்து காயமடைந்த தையல்நாயகி, ராணி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் வழியிலேயே மருத்துவமனை செல்லும் வழியிலேயே தையல்நாயகி பரிதாபமாக உயிரிழந்தார். ராணி மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். கார் டிரைவரின் அஜாக்கிரதையால் ஏற்பட்ட விபத்தில் கர்ப்பிணி பெண், அவரது கணவர் மற்றும் மூதாட்டி உள்ளிட்ட 3 உயிர்கள் பறிபோன சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Story image

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் விபத்தை ஏற்படுத்திய காரை அடித்து நொறுக்கி குளத்திற்குள் தள்ளிவிட்டனர். இவ்விபத்து குறித்து வைத்தீஸ்வரன் கோவில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதுடன் தப்பியோடிய கார் டிரைவரையும் தேடி வருகின்றனர்.

மேலும் பொதுமக்கள் கார் டிரைவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வைத்தீஸ்வரன் கோவில் மணல்மேடு பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த சீர்காழி கோட்டாட்சியர் நாராயணன், டிஎஸ்பி சம்பவ இடம்விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் மறியல் கைவிடப்பட்டது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.