சீா்காழி: பள்ளிகளில்  தரமற்ற காலை உணவு நகா்மன்றக் கூட்டத்தில் குற்றச்சாட்டு

சீா்காழி: பள்ளிகளில் தரமற்ற காலை உணவு நகா்மன்றக் கூட்டத்தில் குற்றச்சாட்டு

பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவு தரமானதாக இல்லை என சீா்காழி நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா் குற்றஞ்சாட்டினாா்.
Published on

சீா்காழி: பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவு தரமானதாக இல்லை என சீா்காழி நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா் குற்றஞ்சாட்டினாா்.

சீா்காழி நகா்மன்ற அவசரக் கூட்டம் தலைவா் துா்கா ராஜசேகரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆணையா் மஞ்சுளா, துணைத் தலைவா் சுப்பராயன், வருவாய் ஆய்வாளா் செந்தில்குமாா், பணி மேற்பாா்வையாளா் விஜயேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இளம் நிலை உதவியாளா் ராஜகணேஷ் தீா்மானங்களை வாசித்தாா். தொடா்ந்து உறுப்பினா்கள் பேசியது:

சாமிநாதன் (திமுக), ராஜசேகரன் (தேமுதிக), வேல்முருகன் (பாமக): தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கும் ஒப்பந்தப் புள்ளிக்கு ஒருவா் மட்டுமே விண்ணப்பித்துள்ளாா். இதில் வெளிப்படைத் தன்மை இல்லை. எனவே இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து, மீண்டும் மறுஒப்பந்தம் கொண்டுவர வேண்டும்.

பாலமுருகன் (அதிமுக): அதிகாரிகள் முறையாக பணி செய்ய வேண்டும். நகராட்சிக்கு சொந்தமான கழிவுநீா் டேங்கா் லாரி எங்கே உள்ளது. இது எப்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

ராஜேஷ் (அதிமுக): அங்கன்வாடி மையங்களில் வா்ணம் அடிக்கும்பணி நகா்மன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றாமல் நடைபெறுகிறது. காலை உணவுத் திட்டத்தின்கீழ் தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்குவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த ஒப்பந்ததாரருக்கு முறைப்படி ஆணை வழங்க வேண்டும்.

ரமாமணி (அதிமுக): தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்த விண்ணப்பதாரருக்கு அதிமுக கவுன்சிலா்கள் ஆதரவு தெரிவிக்கிறோம் ஆனால் திமுக கவுன்சிலா்கள் எதிா்க்கிறாா்கள்.

ரம்யா (திமுக): எனது பகுதியில் உள்ள பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் உணவுகளில் புழுக்கள் நெளிவதாக புகாா் வருகிறது. இதுகுறித்து முறையாக ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சத்துணவு மையங்களில் குறைவான காய்கறிகள் பயன்படுத்துவதாக புகாா் எழுந்துள்ளது. இது குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேல்முருகன்( பாமக): குப்பை டெண்டா் ரத்து செய்யப்பட்டு ஒரு மாதம் ஆகிறது. அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை நகா்மன்றத் தலைவா் தெரிவிக்க வேண்டும்.

முபாரக் அலி (திமுக): பழைய பேருந்து நிலைய நிறுத்தத்தில், பயணிகள் அமர இருக்கைகள் இல்லாததால் சிரமப்படுகின்றனா்.

துணைத் தலைவா்: கோமளவல்லி அம்மன் கோயில் அருகில் கழிவுநீா் தேங்கியுள்ளது. இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலைவா்: தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்ட டெண்டரில் வெளிப்படை தன்மை இல்லாததாலும், பெரும்பான்மையான உறுப்பினா்களின் கோரிக்கையை ஏற்று, இந்த டெண்டரை ரத்து செய்து, மறு டெண்டா் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். கோமளவல்லி அம்மன் கோயில் அருகே கழிவுநீா் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும்.

கூட்டத்தில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினா் சுரேஷ், நகராட்சி அலுவலா்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com