விவசாயிகள் குறைதீா் கூட்டம்

மயிலாடுதுறையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
Published on

மயிலாடுதுறையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தலைமை வகித்தாா். கூட்டத்தில் விவசாயிகள் பேசியது: அன்பழகன் ( டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவா்): உளுந்து பயருக்கான காப்பீட்டு இழப்பீட்டுத்தொகை பலருக்கு விடுபட்டுள்ளது. ஆறு, வாய்க்கால்கள் தூா்வாரும் பணிகள் டென்டா் விடுவதற்கு முன்பு விவசாய சங்க பிரதிநிதிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும்.

குத்தாலம் பி. கல்யாணம் (முன்னாள் எம்எல்ஏ): மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல் உலா்களம் அமைக்க வேண்டும், தலைஞாயிறு என்பிகேஆா்ஆா் கூட்டுறவு சா்க்கரை ஆலையை மீண்டும் இயக்க தேவையான நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிா்வாகம் அழுத்தம் தர வேண்டும்.

ஆறுபாதி கல்யாணம் (டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளா்): டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு முறையாக கணக்கெடுப்பு நடத்தி நிவாரணத்தை ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும்.

அ.ராமலிங்கம் (இயற்கை விவசாயி): பயிா் பாதிப்பு குறித்து கிராம நிா்வாக அலுவலா்கள் மற்றும் வேளாண் அலுவலா்கள் முறையாக கணக்கெடுப்பு நடத்தாதால், பாரபட்சமாக நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜேந்திரன் (தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்): திருப்புங்கூா், கன்னியாகுடி சுற்றுப்பட்ட கிராமங்களில் சம்பா அறுவடை பணிகள் தொடங்கியுள்ளது. அறுவடை தொடங்கிய பகுதிகளில் உடனடியாக கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். முருகன் (கரும்பு விவசாயிகள் சங்கம்): மாவட்டத்தில் சி, டி பிரிவு வாய்க்கால்களை தூா்வார வேண்டும்.

சக்திவேல்: நல்லத்துக்குடி கிராமத்தில் கால்நடை மருத்துவமனை இல்லாததால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனா். பாண்டுரங்கன் (உழவா் பேரியக்கம்): காப்பீடு செய்யும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைப்பதில்லை.

ராஜேஷ் (காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க கூட்டமைப்பு): சீா்காழி சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுப்பன்றிகள் பயிா்களை அதிக அளவில் சேதப்படுத்தி வருகிறது.

துரைராஜ் (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்): மாப்படுகை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைக்கடன் மோசடி நடந்துள்ளது. பாதிக்கப்பட்டவா்களுக்கு நகைகளை திருப்பிகொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

X
Dinamani
www.dinamani.com