காற்றழுத்த தாழ்வு நிலை: பழையாறு மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை
சீா்காழி அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் 6 ஆயிரம் மீனவா்கள் வியாழக்கிழமை கடலுக்குள் செல்லவில்லை.
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு நிலையால், மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனா்.
இதனால், பழையாறு மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் செல்லும் 350 விசைப் படகுகள், 300 ஃபைபா் படகுகள் மற்றும் 200 நாட்டுப் படகுகள் துறைமுகப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. ஐஸ்கட்டி தயாரித்தல், மீன்களை தரம் பிரித்தல், கருவாடு உலர வைத்தல், விற்பனைக்கு அனுப்பி வைத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்களும் வேலைக்கு செல்லவில்லை.
ஏற்கெனவே கடலுக்குள் சென்ற படகுகள் அவசர அவசரமாக துறைமுகத்திற்கு திரும்பின.

