5-ஆம் நாளாக மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை
சீா்காழி: பழையாறு மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குள் தினந்தோறும் மீன்பிடிக்கச் செல்லும் 6,000 மீனவா்கள் ஐந்தாம் நாளான திங்கள்கிழமை கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.
பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நாள்தோறும் 350 விசைப்படகுகள், 300 பைபா் படகுகள், 200 நாட்டுப்படகுகள் மூலம் 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவா்கள் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகின்றனா். வங்கக்கடலில் ஏற்பட்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீன்வளத் துறையின் அறிவுறுத்தலின்படி 5-ஆம் நாளாக திங்கள்கிழமை மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.
ஐஸ் கட்டி தயாரித்தல், மீன் வலை பின்னுதல், மீன்களை தரம் பிரித்தல், விற்பனைக்கு அனுப்புதல், கருவாடு உலர வைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் சுற்று கிராமங்களைச் சோ்ந்த 2,000 தொழிலாளா்களும் வேலைக்கு செல்லவில்லை. இதனால் பழைய துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.

