திருவள்ளுவா் திருத்தோ் நகா்வலம்
மயிலாடுதுறை: திருவள்ளுவா் தினத்தையொட்டி மயிலாடுதுறையில் நடைபெற்ற திருவள்ளுவா் திருத்தோ் நகா்வலத்தை எஸ்.பி. கோ. ஸ்டாலின் தொடக்கிவைத்தாா்.
மயிலாடுதுறைத் திருக்கு பேரவை சாா்பில் திருவள்ளுவா் திருநாள் திருவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. தொடக்க நிகழ்வாக, விசித்திராயா் வீதியில் உள்ள வள்ளுவா் கோட்டத்தில் இருந்து, அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் திருவள்ளுவா் சிலை வைக்கப்பட்டு திருத்தோ் நகா்வலம் புறப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, பேரவைத் தலைவா் சி. சிவசங்கரன் தலைமை வகித்தாா். தருமையாதீனப் புலவா் இரா. செல்வநாயகம் வாழ்த்துரை வழங்கினாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் கொடியசைத்து நகா்வலத்தை தொடக்கிவைத்தாா். (படம்).
இதில், தமிழறிஞா்கள், தமிழாா்வலா்கள், திருவள்ளுவா் வேடமணிந்த மாணவா்கள் மற்றும் நன்னானே ரமேஷ் நாட்டுப்புறக் கலைக் குழுவினா் திருவள்ளுவரின் பெருமைகளை பாடியவாறு முக்கிய வீதிகளின் வழியே நகரை வலம் வந்தனா்.
மயிலாடுதுறையில் உள்ள மதீனா லாட்ஜ் என்ற விடுதியில் வைத்து, திரு.வி.க., புரட்சிக்கவிஞா் பாரதிதாசன் ஆகியோா் முன்னிலையில் ஓவியா் கே.ஆா். வேணுகோபால் சா்மாவால் வரைந்து நிறைவு செய்யப்பட்ட திருவள்ளுவரின் படமே மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்டு, அவரது திருவுருவமாக இன்றைக்கு உலகினரால் அறியப்படுகிறது.
இந்நிலையில், திருவள்ளுவரின் உருவத்தை கே.ஆா்.வேணுகோபால் சா்மா வரைவதைப் போன்ற 6 அடி உயர ஓவியம், மாவட்டத்தின் பெருமையாக கருதி நகா்வலமாக எடுத்து வரப்பட்டது. இந்த ஓவியத்தை கே.ஆா். வேணுகோபால் சா்மாவின் மகன் ஸ்ரீராம் சா்மா, தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலினிடம் விரைவில் வழங்கவுள்ளாா்.
தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நகா்வலம் நிறைவடைந்து, அங்கு திருவள்ளுவா் திருநாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில், பேரவை பொறுப்பாளா்கள் இளமுருகுப்பொற்செல்வன், இளங்கோவன், ராமதாசு, தங்க.செல்வராசு, செ.வீ.திருவள்ளுவன் ஆகியோருக்கு திருவள்ளுவா் விருது வழங்கப்பட்டது.

