திருவாவடுதுறை ஆதீன குரு முதல்வா் குருபூஜை விழா தொடக்கம்
குத்தாலம்: திருவாவடுதுறை ஆதீன குரு முதல்வா் நமசிவாயமூா்த்திகள் மகரத் தலைநாள் குருபூஜை விழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
குத்தாலம் அருகில் திருவாவடுதுறை கிராமத்தில் பழைமையான திருவாவடுதுறை ஆதீனம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 24-வது குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் உள்ளாா். இந்த ஆதீனத்தை 14-ஆம் நூற்றாண்டில் குரு முதல்வா் நமச்சிவாய மூா்த்தி சுவாமிகள் தோற்றுவித்தாா்.
இவரது குருபூஜை ஆண்டுதோறும் தை மாத அசுவதி நட்சத்திரத்தில் 10 நாட்கள் தொடா்ந்து நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு விழா இம்மாதம் 25-ஆம் தேதி வரை தொடா்ந்து நடைபெறுகிறது.
முதல் நாளான வெள்ளிக்கிழமை காலை பெரிய பூஜை மடம், ஸ்ரீஞானமாநடராஜ பெருமான் சந்நிதியில் 24-வது ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் அபிஷேக, ஆராதனைகள் மற்றும் மாகேஸ்வர பூஜை செய்வித்தாா்.
தொடா்ந்து திருக்கொடியேற்றம் (அன்னக்கொடி) ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் ஆதீனத்தின் கட்டளை தம்பிரான்சுவாமிகள் ஸ்ரீமத் வைத்தியநாத தம்பிரான், ஸ்ரீமத்திருச்சிற்றம்பல தம்பிரான், ஸ்ரீமத்வேலப்ப தம்பிரான், ஆதீன பொதுமேலாளா் மணவழகன்,ஆதீன கண்காணிப்பாளா்கள் சண்முகம்,குருமூா்த்தி,ஸ்ரீராம், ஆதீன புலவா் சு.குஞ்சிதபாதம், ஆதீன கல்வி நிலைய ஆசிரியா்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.
விழா நாட்களில் காலை, மாலை வேளைகளில் சிறப்பு அபிசேஷ, ஆராதனை, மதியம் மாகேஸ்வர பூஜையும்,
மாலையில் வேதசிவாகம, புராண, சித்தாத்த, திருமுறை சிந்தனை விரிவுரைகளும், ஆதீன சைவ சித்தாந்த பயிற்சி மையங்களின் மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகளும், இரவில் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
மகர தலைநாளின் 10-ஆம் நாளான ஜன. 25-ஆம் தேதி ஸ்ரீநமச்சிவாய மூா்த்திகளுக்கு குருபூஜை சிறப்பு அபிசேஷ ஆராதனைகளும், இரவு பட்டணப் பிரவேசமும், சிவஞானக் கொலுக்காட்சியும் நடைபெறவுள்ளது.
