திட்டச்சேரி அருகே விவசாயி எரித்துக் கொலை: மனைவி உள்பட 2 பேர் கைது

நாகையை அடுத்த திட்டச்சேரி அருகே வயலுக்குத் தண்ணீர்ப் பாய்ச்ச சென்ற விவசாயி எரித்துக் கொலை செய்யப்பட்டது
Updated on
1 min read

நாகையை அடுத்த திட்டச்சேரி அருகே வயலுக்குத் தண்ணீர்ப் பாய்ச்ச சென்ற விவசாயி எரித்துக் கொலை செய்யப்பட்டது திங்கள்கிழமை காலை தெரியவந்தது. இதுதொடர்பாக, அவரது மனைவி உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
காரைக்கால் மாவட்டம், ஊழியப்பத்து பகுதியைச் சேர்ந்தவர் வ. மகேந்திரன் (38). விவசாயி. இவரது மனைவி கீதா (36). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. நாகை மாவட்டம், திட்டச்சேரி அருகே உள்ள அருண்மொழித்தேவன் பகுதியில் உள்ள விவசாய நிலத்துக்குத் தண்ணீர் திறந்து விட்டு வருவதாகக் கூறி ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற மகேந்திரன் வீடு திரும்பவில்லை.
மகேந்திரன் வீடு திரும்பாதது குறித்து கீதா அளித்த தகவலின்பேரில், மகேந்திரனின் சகோதரர் திங்கள்கிழமை காலை மகேந்திரனைத் தேடிச் சென்றபோது, அருண்மொழித்தேவன் பகுதிக்கு அருகில் உள்ள வாய்க்கால் கரையில் மகேந்திரனின் சடலம் எரிந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த திட்டச்சேரி காவல் ஆய்வாளர் (பொறுப்பு) குலோத்துங்கன், காவல் உதவி ஆய்வாளர்கள் மணிமேகலை, மகாதேவன் ஆகியோர் நிகழ்விடத்துக்குச் சென்று, மகேந்திரனின் சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மகேந்திரனின் சடலத்தை போலீஸார் சோதனையிட்ட போது,  அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரது மனைவி கீதாவிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 
விசாரணையின்போது, கீதாவுக்கும்,  காரைக்கால் ஊழியப்பத்து பகுதியைச் சேர்ந்த க. ஹரிஹரன்(30) என்பவருக்கும் பழக்கம்  இருந்ததாகவும், அதற்கு மகேந்திரன் தடையாக இருப்பதாகக் கருதிய ஹரிஹரன், மகேந்திரனை கட்டையால் தலையில் தாக்கிக் கொலை செய்து,  மோட்டார் பம்பு செட்டுக்காக வாங்கிய டீசலை மகேந்திரன் மீது ஊற்றி எரித்து விட்டுத் தப்பியோடியதாகத் தெரியவந்தது.
இதுகுறித்து திட்டச்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கீதா, ஹரிஹரன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com